Thursday, 19 January 2012

அரசியல் திறன்

பண்புடனில் வெளியான கட்டுரை
http://panbudan.com/story/arasiyal-thiran

ஒரு கார்பரேட்(corporate) சூழலில் எப்படிப்பட்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பது நிர்வாகவியலில் என்றும் அலசப்படும் ஒரு விஷயம். இது ஒரு ஆர்வமூட்டும் கேள்வியும் கூட. நிர்வாகத்தில் வெற்றி அறிவுத்திறனால் மட்டுமே என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. இது intelligence quotient (IQ) என்ற ஒரு அளவையால் அளக்கப்பட்டது. நிர்வாகிகள் பெரும்பாலும் இந்த தகுதியிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பின் அவர்கள் தங்கள் கீழிருப்பவர்களை நிர்வாகிக்கும் போது அவர்களின் உணர்ச்சிகளும் அதனை சமாளிக்கவேண்டிய ஒரு அவசியமும் கவனத்திற்கு வந்தது. இந்த சமயத்தில் Daniel Goldman என்பவர் உணர்ச்சி திறன் (emotional intelligence ) என்ற ஒரு கருதுகோளை அறிமுகபடுத்தினார். ஒரு தனி நபரின், குழுவின் உணர்சிகளை அவதானித்து அதை முறைப்படுத்தும் திறன் அது. பிறரின் உணர்சிகளையும் அதன் பின் உள்ள காரணிகளையும் சரியாக உணர்ந்து அதற்கேற்ப செயல்படுபவனே மனிதர்களை நிர்வகிக்க திறன் உடையவன் ஆகிறான் என்பதே அதன் சாராம்சம்.

இத்தனைக்கும் பின்பும் கூட ஒரு விஷயம் ஆய்வாளர்களை குழப்பியது. அறிவு திறனும், உணர்ச்சி திறனும் அதிகம் வாய்க்க பெற்ற பலர் பின்னால் இருக்க ஒப்பீட்டளவில் இந்த திறன்கள் அதிக அளவில் அமைய பெறாத சிலர் முன்னணியில்இருந்தார்கள். இது ஏன் என்று ஆராய்ந்து பின்பு அதற்கான காரணத்தை கண்டுபிடித்தனர். அது மாக்கியவல்லியின் காலகட்டத்தில் இருந்தே பேசப்பட்டு வரும் அரசியல் திறன் என்பதே ஆகும். இதை political quotient(PQ) என்ற சொல்லால் குறிக்க தொடங்கினர். ஆனால் மாக்கியவல்லி விவரிப்பதை போன்ற பயமுறுத்தும், ஏமாற்றும்,நம்ப வைத்து கழுத்தறுக்கும் எதிர்நிலை அம்சங்கள் கொண்டதல்ல இது. மாறாக இது மக்களின் நம்பிக்கையும், மதிப்பையும் சம்பாதித்து அதன் மூலமாக ஒரு அதிகார வலையை உருவாக்குவது. இன்றைய தட்டையான கார்பரேட் அமைப்புகளில் தன ஆதிக்கத்திற்கு கீழ் வராத எந்த வித அதிகாரமும் செலுத்த முடியாதவர்களை வைத்தே ஒருவர் பல திட்டங்களை செயல் படுத்த வேண்டி இருக்கிறது. இதில் அறிவுத்திறனும் உணர்ச்சி திறனும் மட்டும் இருந்தால் போதாது..அரசியல் திறன் அதிகமும் தேவை.

இந்த திறனை எப்படி வளர்த்து கொள்வது, அதை எப்படி வரையறுப்பது என்பது குறித்து ஜோ ஓவென்(JO OWEN ) என்பவர் தனது 'வழிநடத்துவது எப்படி (How to Lead)' என்ற புத்தகத்தில் விவரித்து இருக்கிறார். அதிகாரத்தின் விதிகள் என்ற தலைப்பில் அதை பின்வருமாறு பட்டியல் இடுகிறார்.

1) செயல்திட்டத்தை வடிவமைப்பவராய் இருங்கள்

நீங்கள் ஈடுபடும் செயல்களில் வேறு எவருக்கும் முன்னதாகவே நீங்கள் செயல் திட்டத்தை கையில் எடுப்பது அவசியம்.

  • எங்கே இருக்கிறோம்
  • இறுதி இலக்கு என்ன
  • அதை எப்படி அடைய போகிறோம்

என்ற மூன்றையும் உடனே வரையறுத்து விடுங்கள். இந்த முன்வரைவை நீங்கள் அளித்த பின்பு வேறு யாராவது மறுப்புகள் சொன்னாலும் அது இந்த சட்டகத்திற்கு உள்ளேயே இருக்கும். இதுவே அரசியலின் முதல் படி.

2) தொடர்புகளை உருவாக்குங்கள்

உங்கள் அதிகாரம் நீங்கள் உருவாக்கும் தொடர்புகளின் தரத்தையே சார்ந்து இருக்கிறது. நீங்கள் உங்கள் மேலாளருடைய மேலாளரிடம் தொடர்புகளை உருவாக்கி கொள்ளுதல் அவசியம். உங்களுடைய நேரடி நிர்வாகியால் உங்கள் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற முடிவதில்லை. அதை நீங்கள் உங்கள் தொடர்புகள் மூலமே நிரப்ப வேண்டும். உங்கள் தொடர்பு வலையை சிறுக சிறுக விரிவாக்குங்கள். உங்களை பின்பற்றுபவர்களை நீங்கள் உருவாக்கவேண்டியது அவசியம். மக்களின் முன்னேற்றத்திலும் அவர்களின் வளர்ச்சியிலும் நீங்கள் அக்கறை கொள்ளும்போது அவர்கள் உங்களுக்கு விசுவாசமானவர்களாக மாறுகிறார்கள்.

3) நடிக்க ஆரம்பியுங்கள்

நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அவரை போன்று நடிக்க தொடங்குங்கள் என்பது பழமொழி. உங்கள் மேலாளருடைய பாவனையை கைகொள்ள ஆரம்பியுங்கள். உடைகள், உடல்மொழி போன்ற எல்லாம் இதில் அடங்கும். உங்கள் மேலாளருடைய பார்வையில் ஒரு பிரச்சனையை அணுகி அவருடைய மொழியில் பேச துவங்கும் போது நீங்கள் அவருக்கு இணையானவராய் கருதப்படுவீர்கள்.

4) உங்கள் மோதல்களை தேர்ந்து எடுங்கள்

எந்த ஒரு நிறுவனமும் முரண்பாடுகள் நிறைந்ததாக தான் இருக்கும். குறைவான வாய்ப்புகளுக்கு பலர் முண்டியடிக்கும் ஒரு களன் அது. இதில் தன்முனைப்பினால் வரும் மோதல்களும் சண்டைகளும் சகஜம்.. அந்த முரண்பாடுகள் உருவாக்கும் மோதல்களில் இருந்து எப்போதும் தப்பிக்க நினைக்காதீர்கள். அதை எதிர்கொள்ளுங்கள். ஆனால் வீணான சண்டைகளில் நேர விரயம் செய்வதும் உகந்ததல்ல. இந்த மூன்று விதிகளை நினைவில் வைத்திருப்பது உதவும்.

  • சில்லறை லாபங்களுக்காக ஒரு போதும் மோதலில் இறங்க வேண்டாம்.
  • நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே கோதாவில் இறங்குங்கள்.
  • வேறு எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டுவிட்டால் மட்டுமே மோதலில் ஈடுபடுங்கள்.

5) கொஞ்சம் பைத்தியகாரனாய் இருங்கள் .

எப்போதும் அறிவிற்கும்/நடைமுறைக்கும் பொருந்தி வருகிறது போன்ற செயல்திட்டங்களை மட்டும் வைத்து கொள்ளாதீர்கள். கனவு காண்பவராக இருங்கள்.ஒரு நடைமுறை நிர்வாகியால் மைக்ரோசாப்ட்-ஐயோ ஜெனரல் மோட்டர்சையோ எதிர்கொள்ள முடிந்திருக்காது. ஆப்பிள்-யும் டோயோடாவையும் உருவாக்கி அளித்தது இந்த 'பைத்திய கார' நிர்வாகிகளே. உங்கள் கீழ் இருப்பவரிடம் இருந்து அளவுக்கு அதிகமாய் எதிர்பாருங்கள். அப்போது அவர்களின் சாத்தியங்களின் எல்லைகள் அதிகரிக்கப்படுகின்றன. அது உங்கள் நிறுவனத்தின் சாத்தியங்களை அதிகரிப்பதே.

6) அதிகாரத்தை தேடி செல்லுங்கள்

பணம் வேண்டுபவர்கள் பணத்தை தேடி செல்வது போல, புகழ் வேண்டுபவர்கள் புகழை தேடி செல்வது போல, அதிகாரம் வேண்டுபவர்கள் அதிகாரத்தை தேடி செல்லுங்கள். எந்த ஒரு அமைப்பிலும் ஒரு அதிகார மையம் ஒன்று இருக்கும். அத்துடன் இயைந்து கொள்வது மூலமே ஒருவரால் அதிகார படிகளை ஏற முடியும். இந்த மையத்துடன் ஒன்றாமல் தனித்து வேலை செய்து கொண்டிருப்பதன் மூலமாக உங்களுக்கு ஒரு பிரச்சனைகள் அற்ற ஒரு சூழல் அமையலாம். ஆனால் அதில் முன்னேற்றங்களும் இல்லை என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

7) தெளிவின்மைக்கு தயாராய் இருங்கள்

ஒரு அமைப்பில் தெளிவின்மைகளும் நெருக்கடிகளும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். தெளிவான பாதைகள் பெரும்பாலும் இருப்பதே இல்லை. அரசியல் திறன் மிக்க ஒருவன் இந்த தெளிவற்ற சூழலை தன்வச படுத்தி கொண்டு தலைமை ஏற்று செயல்திட்டத்தை வழி நடத்துகிறான். முக்கியமான செயல்திட்டத்தை அவன் கைகொண்ட பிறகு மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் சின்ன பொறுப்புகளுக்கு பிறர் முண்டியடிக்கும் நிலைமைக்கு தள்ள படுவார்கள்.

8) இறுதி இலக்குகளில் கருத்தாய் இருங்கள்

இலக்குகளில் கவனமாய் இருப்பது என்பது எல்லோரும் அறிந்த, முனைந்து சொல்லுவதற்கும் தேவையில்லாத ஒன்று என்றே தோன்றும். ஆனால் பல நிர்வாகிகள் செயல்முறை சிக்கல்களில் கவனம் கொடுத்து இறுதி இலக்கை தவற விட்டு விடுகின்றனர். நிர்வாகம் எப்போதுமே அலசி ஆராய்ந்து சிந்தனை செய்து கொண்டு இருப்பவர்களையும் செயலை முன்னேடுப்பவர்களையும் எளிதாக தரம் பிரித்து கண்டு கொள்கிறது. இரண்டாமவருக்கே முன்னேற வாய்ப்புகள் உண்டு.

9) பயன்படுத்தாதை இழந்து விடுவீர்கள்

நீங்கள் எவ்வளவு தூரம் உங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை உபயோகிக்கிறீர்களோ அவ்வளவு தூரம் நீங்கள் மேலும் அதிகாரத்தை ஈட்டுவீர்கள். அதிகாரம் மேலும் மேலும் அதிகாரத்தை ஈர்க்கும்.அதிகாரத்திற்கான ஒரு காலியிடத்தை எப்போதும் விட்டு வைக்காதீர்கள். உங்களால் முடியாவிட்டால் அது வேறொருவரால் நிரப்பப்படும்.

மேற்சொன்னவை அறிவுத்திறன் மற்றும் உணர்ச்சிதிறனின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவது அல்ல. ஆனால் இவற்றுடன் அரசியல் திறனும் சேரும்போது மட்டுமே ஒருவன் அமைப்பின் ஏணிப்படிகளில் விரைவாக ஏறுகிறான். மேலும் அதிகாரம் சூழ்ச்சிகளாலும், நயவஞ்சகத்தாலும் அடையபெறுவது அல்ல, மாறாக நம்பிக்கையும், மதிப்பும் நிறைந்த தொடர்புகளை உருவாக்கி கொள்வதிலும் இலக்குகளைஅடைவதில் உள்ள ஒருவரது திறனிலும் அது ஒளிந்திருக்கிறது என்பதை இது சுட்டுகிறது.



No comments:

Post a Comment