Saturday, 12 April 2014

நம்பிக்கை

http://solvanam.com/?p=26133

அருணாசலம் பவானியை ஆசிரமத்தில் சேர்த்து விட்டு வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவருடன் சேர்ந்து சங்கரியும் அல்லவா அதற்க்கு உடந்தையாக இருந்தாள். இத்தனைக்கும் அருணாசலம் சங்கரி தம்பதியினரின் ஒரே மகள் பவானி. அப்படி என்ன பக்தியும் பாவமும் வேண்டி இருக்கிறது இந்த பைத்தியங்களுக்கு? என்று சொல்லாத ஆளில்லை. அவர் தம்பி கதிரேசனும் கூட தான்.இல்லாவிட்டால் பதினெட்டு வயது ஒரே பெண்ணை, பவானியை யாரவது இந்த இந்த பகவான் ஆசிரமத்திற்கு தாரை வார்த்து கொடுப்பார்களா?

வாழ்கையின் விளக்க முடியாத பல மர்மங்களில் ஒன்று தான் அருணாசலம் பகவானை தேடி சென்றதும்.சங்கரியின் ஒரே தம்பியான கதிரேசன் தான் முதன் முதலில் பகவானை இவருக்கு அறிமுகபடுத்தியது. கண்ணுக்கு தெரியாத விதியின் கரங்கள் இவர் அலுவலக வாழ்கையை கலைத்து போட அதன் விளைவான மன உளைச்சல்களால் அருணாசலம் அவதிப்பட்டு கொண்டிருந்த காலம்.

 “யார் யாருக்கோ நல்லது நடக்கிறதே அக்கா. என் நெருங்கிய சிநேகிதரின் உறவினர் ஒருவர. ஏழு தலைமுறைக்கு சொத்து. ஆனால் பேர் சொல்ல ஒரு வாரிசு இல்லை. ஒன்று இல்லை இரண்டு இல்லை, பன்னிரண்டு வருடம். ஒரு மண்டலம் விரதமிருந்து பகவானை பூஜை செய்தபின் அடுத்த மாதமே கை மேல் பலன். இரண்டு கோடி ருபாய் கடன் உள்ள ஒருவர், தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்தவர், லாட்டரி அடித்து அதில் இருந்து மீண்ட அதிசயங்களை கேள்வி பட்டிருகிறாயா? ஒரு நாள் ஆசிரமத்திற்கு போய் தான் பாரேன். ”

 இந்த கதிரேசனே பின் ஒரு நாளில் அந்த பகவானையும் அந்த கூட்டத்தையும் விட்டோழிக்கும்படி மன்றாடியது வாழ்கையின் விசித்திரங்களில் மற்றொரு அத்தியாயம்.. இந்த பகவான் அவரது ஆரம்ப காலங்களில் குருஜி என்று மட்டுமே அழைக்கப்பட்டார. மின்சார துறை ஊழியராக இருந்தவர். தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் ஒரு குடிலில் வசித்து வந்த யோகியிடம் முறையாக யோகம் பயின்றதாக சொல்வார்கள். சிறிது நாட்களில் எல்லாம் அவர் கால வெளிகளை கடந்து சஞ்சரிக்க தொடங்கியதாக சொன்னார்கள்.கூடு விட்டு கூடு பாய்தல்,எதிர்காலத்தை அறிந்து சொல்வது என்று அவரது சித்திகளின் எண்ணிக்கை கூட தொடங்கியது.

ஒட்டிய வயிறும் நீண்ட தாடியும் வழுக்கை தலையுமாக அவரது அந்த நாட்களின் கோலம் இன்றும் ஆசிரமத்தில் காண கிடைக்கிறது. பின் மாடம்பாகத்தில் சிறிதாக ஒரு குடில் அமைத்து பக்தி பிரசங்கங்கள் செய்ய தொடங்கினார். சொற்ப எண்ணிக்கையில் இருந்த பக்தர் கூட்டம், போலந்தில் இருந்து ஒரு அணு விஞ்ஞானி வர தொடங்கியதும் நூற்றுக்கணக்காக அதிகரிக்க தொடங்கியது. போலந்தின் அந்த அணு விஞ்ஞானியே தலைமை சீடர் பொறுப்பை ஏற்று கொண்டார். குருஜி பொது மக்களுக்கு அளிக்கும் தரிசனங்கள் நின்று போய் சீடர்களே ஆசிரமத்தை நிர்வகிக்க தொடங்கினர். மெல்ல மெல்ல அவர் தன்னை கடவுள் அவதாரமாக அறிவித்து கொண்டு பகவான் என்று நாமகரணம் சூட்டி கொண்டார்.

 ******* ”அப்பா, இந்த வழிபாட்டில் முக்கியமான விஷயம் நாம பகவான் உடன் எப்படி தொடர்பு வைத்து கொள்கிறோம் என்பது தான். நாம் அவரை நண்பராக பார்க்கலாம், தாயாக பார்க்கலாம், தந்தையாக பார்க்கலாம். எந்த உறவு நமக்கும் அவருக்குமான ஆழமான தொடர்பை சாத்தியபடுத்துகிறதோ அந்த உறவை நாம் தேர்ந்தெடுப்பது தான் முதல் படி. பின் நாம் அவருடன் பேச வேண்டும். பேசி பேசி நம்முள் இருக்கும் காம குரோத மோகம் என்னும் அழுக்குகளை நீக்கும் படி பிரார்த்தனை செய்ய வேண்டும். பாவங்களை களையும் படி மன்றாட வேண்டும். அது நடந்த பின்னரே நமக்கும் அவருக்குமான பந்தம் பலப்படும். அந்த பந்தம் பலப்பட்டு பலப்பட்டு ஒரு நாள் நாமும் பகவானும் ஒன்றாகவே ஆகி விடுவோமாம். அதன் பின் நான் பவானி இல்லை. நான் பகவான். ”

அருணாசலம் செல்ல தொடங்கி சில மாதங்கள் கழித்தே பவானி இந்த ஆசிரமத்தில் அறிமுகம் பெற்றாள். ஆனால் அவளுடைய இளம் மனது அதை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்று கொண்டது. மிக எளிதாக அவள் அந்த நம்பிக்கையில் தன்னை கரைத்து கொண்டாள். பவானி..அருணாசலம் சங்கரியின் முக்தி அல்லவா அவள். திருமணம் முடிந்து ஆறு வருடம் கழித்து பிறந்தாள். அருணாசலத்தின் உடன் பிறந்தவர்கள் நான்கு பேரிலும் பெண் குழந்தை உள்ள ஒரே குடும்பம் இவருடையது தான். ஒரு கோழி குஞ்சை போல் அத்தனை சிறியதாக, வெதுவெதுப்பாக இருந்த பிறந்த குழந்தையை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடம்பே கண்ணாக இரு கைகளிலும் ஏந்தி மனம் பொங்க நின்றார். இத்தனை சிறிய உயிருக்கு இவ்வளவு கனம் இருக்க முடியுமா? கனம் அதன் உடலில் இல்லை.குவிந்த அவர் கவனத்தில் இருந்திருக்க வேண்டும். சில மாதங்களில் குழந்தை பூரித்து பொய் சிரித்து பார்ப்பவர் அனைவரையும் வசீகரித்தது. துடித்து கொண்டே இருந்த அதன் கைகளாலும் கால்களாலும் காற்றுடன் ஒரு யுத்தம் நடத்தி கொண்டிருந்திருந்தது. சதா சிரிக்கும் முகத்துடன். பவானி வளர வளர அவள் பெற்றோர்களின் நாட்களை ஆனந்தத்தால் நிரப்பினாள். கண் காணா ஆழத்திலிருந்து அர்த்தத்தை எடுத்து மொழியின் கொக்கியில் அவள் மழலையால் இணைக்கும் விந்தையை பார்த்து பூரித்தார்கள். நடந்தும் தவழ்ந்தும் விழுந்தும் உருண்டும் தூரத்தை அறிந்தாள்.கண்டும் கேட்டும் சுவைத்தும் முகர்ந்தும் உலகத்தை அளந்தாள். அவள் மன புத்தகத்தின் பக்கங்கள் இடைவிடாது அறிதல்களால் நிரம்பி கொண்டிருந்தன.

ஆத்தாளை, அபிராமவல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை “அண்டம் எல்லாம் பூத்தாளை என்பது எத்தனை அழகான வரி இல்லையா சங்கரி” என்று தன் மனைவியை விளித்து கூறுவார். “பூவாகவும் காயாகவும் புல்லாகவும் நீயாகவும் நானாகவும் எல்லாம் பூத்து இருக்கிறாளாம் நம் அபிராமி

“ *********** “அப்பா இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.” அருணாசலம் அமைதியாக இருந்தார். அப்போது உங்களுக்கு பகவான் மேல் நம்பிக்கை இல்லை அப்படி தானே. “அப்படி எதுவும் நான் சொல்லவில்லை.” “பிறகு உங்கள் சம்மதத்தை தருவதற்கு என்ன? எனக்கு மனதில் உள்ள ஒவ்வொரு சொல்லாகவும் அந்த சொல்லில் எல்லாம் நிரம்பிய ஒலியாகவும் இருப்பதும் பகவான் தான்.கண் விழித்து இருக்கும் போதும் தூங்கும் போதும் எல்லா நேரங்களிலும் என் மனதின் அறுபடாத ஒரு நாமமாக இருப்பது பகவான் தான்.அவருடன் ஒன்றாவது தவிர இந்த பிறப்பின் நோக்கம் என்று எனக்கு எதுவும் இல்லை. திருமணம் குழந்தை போன்றவை எல்லாம் என்னால் யோசித்தும் பார்க்க முடியவில்லை. என்னை விடுங்கள் அப்பா..எனக்கு ஆசீர்வாதம் தந்து அனுப்புங்கள்.”


************* பவானி வளரும் நாட்கள் எல்லாம் அருணாசலம் சங்கரி மனதில் தான் எத்தனை எத்தனை இனிமையான நினைவுகள். முதல் நாள் பள்ளியில் சேர்த்துவிட்டு வரும் போது பவானி முகம் சுருக்கி மோவாய் துடிக்க அழுகையில் வெடித்தது, சந்தன நிற பாவடையில் அரக்கு பார்டர் வைத்து தலை நிறைய மல்லியுடன் ஆறு வயதில் கோவிலுக்கு அழைத்து சென்றது, மயில் வாஹனா மன மோகனா என்ற கீர்த்தனையை கற்று கொண்டு பள்ளியில் பாடியது, சிரிப்பும் கும்மாளமுமாய் நண்பிகளுடன் வீட்டை சுற்றி சுற்றி வந்தது. அவள் மூன்று வயது இருக்கும் போது ஒரு முறை வீடு வாசலில் நின்றிருந்த ஆட்டோவில் ஏறி எங்கோ சென்றுவிட அருணாசலமும் சங்கரியும் செருப்பு இல்லாமல் தெரு தெருவாய் ஓடி தம்பதியினர் அழுத அழுகை என்ன. இரவு முழுதும் திரும்ப வராத பெண்ணை நினைத்து கதறி வாய் உலர்ந்து நெடுஞ்சான் கிடையாக படுத்து கிடக்க, அடுத்த நாள் தெய்வ சங்கல்பத்தில் அவள் திரும்பி கிடைத்த போது கிடைத்த சந்தோசம். அருணாச்சலத்தின் முன்னால் விரிந்த தலையும் கண்ணீர் உலர்ந்து ஈரமான கண்களுடன் பவானி மன்றாடி கொண்டிருக்கிறாள். அருணாச்சலத்திற்கும் அவள் சொல்வதில் பிழை இருப்பதாக தெரியவில்லை. “இல்லை, சிறிதாக ஒரு பயம் எட்டி பார்க்கிறதா என்ன? அப்போது தான் பகவானை சந்தேகபடுகிறேனா? என் நம்பிக்கையின் வீரியம் இவ்வளவு தானா? இல்லை நான் இதில் மகிழ்ச்சியே அடைகிறேன். கலியுகத்தில் இருந்து சுவர்ண யுகத்திற்கு உலகை எடுத்து செல்லும் ஒரு வாகனமாக என் பெண் இருக்கபோகிறாள். இந்த பேறு எத்தனை பேருக்கு கிடைக்கும்.” என்றவாறே அவர் சங்கரியை பார்க்கிறார். சங்கரி தன கணவனை மீறிய உலகை அறியாதவர். அவரால் அதை மறுக்கவா முடியும். “எனக்கு ரொம்ப சந்தோசம் பவானி” என்று கூறினார்.

************* பவானி பிறந்து வளர்கிற நாட்களில் எல்லாம் அருணாசலம் வேலையில், பணத்தில், பொருளாதாரத்தில் எந்த குறையும் இல்லை. புல்டோசர்கள், ரோடு ரோலர்கள் போன்றவை தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் கணக்கராக சேர்ந்து கணக்கு அதிகாரியாக உயர்வு பெற்றிருந்தார். காலை எட்டு மணிக்கெல்லாம் ஆபிஸ் வந்து, சீட்டு பிசினஸ், புடவை வியாபாரம், வம்பளப்புகள் எல்லாவாற்றிலிருந்தும் தன்னை ஒதுக்கி கொண்டு நேரம் பார்க்காமல் வேலை செய்ததால் கிடுகிடுவென்று பதவி உயர்வுகள் தேடி வந்தன. இருபது வருடங்களில் தலைமை கணக்கு அதிகாரியாக ஆகி இருந்தார். இவை எல்லாம் இப்படியே தொடர்ந்திருக்கலாம். விதி ஒரு கல்கத்தா மேனேஜரின் வடிவில் வந்து விளையாடியது. அந்த அலுவலகத்தில் இருந்த மூத்த அதிகாரிகள் பலர் பதவி இறக்கம் செய்யப்பட்டு குறைவான அனுபவமும் ஐஐடி ஐஐஎம் போன்ற கல்லூரிகளில் படித்தவர்களுமான இளைஞர்கள் கீழ் வேலை செய்யும் படி ஆயிற்று. அதில் அருணாச்சலமும் ஒருவர். சில மாதங்களிலேயே இருபது வருடங்கள் வேலை செய்த அந்த அலுவலகம் அருணாச்சலத்திற்கு அன்னியமாகி போனது. இவரது வேலையின் அளவு குறைக்கப்பட்டு அவரது முக்கியத்துவம் போனது. ஆரம்பத்தில் இதை சாதரணமாக எதிர்கொண்ட அருணாச்சலத்திற்கு நாட்பட நாட்பட தன் இருபது வருட அலுவலக வாழ்கை தோல்வியில் முடிந்ததை ஏற்று கொள்ள முடியவில்லை. எல்லா கதவுகளும் மூடப்பட்ட ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டு மூச்சு திணறுவதாக உணர்ந்தார். கண்ணுக்கு தெரியாத கரங்களால் அவர் அந்த அலுவலகத்தில் இருந்து வெளி தள்ளப்பட்டு கொண்டிருந்தார..எந்த நோக்கத்திற்காக வேலைக்கு செல்கிறோம் என்றே தெரியாமல் சென்று கொண்டிருந்தார். அவருக்கு அளிக்கபட்டிருந்த தனி அறையில் கதவை வெறித்தவாறே நாள் முழுதும் அமர்ந்திருப்பார்.காலை பத்து மணி பரபரப்பில் அலுவலகம் சுழன்றோடி கொண்டிருக்கும் வேளையில் வெளியில் தெரியும் கார்களை எண்ணி கொண்டும் ரோடு பேருக்கும் துப்புரவு தொழிலார்களையும் பார்த்து கொண்டும், எப்போதாவது கரையும் காக்கையை கேட்டு கொண்டும் அமர்ந்திருப்பார். அலுவலகத்தில் தொடங்கிய இந்த நடைமுறை வீட்டிலும் தொடர்ந்தது.ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்த பின் படுக்கை அறையில் உள்ள சாய்வு நாற்காலியில் விளக்குகள் எல்லாம் அணைத்துவிட்டு சுவரையே பார்த்தபடி அமர்ந்திருப்பார். எட்டு மணிக்கு சாப்பாடு. பின் படுக்கையில் படுத்து கொண்டே இது தொடர்ந்தது. பல நாள் இரவுகளில் அவர் படுக்கையில் உட்கார்ந்த வாறே தனியாக பேசி கொண்டிருந்ததை கண்டதும் சங்கரிக்கு பயம் வந்தது.

 இந்த நாட்களில் தான் கதிரேசன் பகவானை அறிமுகபடுத்தி ஆசிரமத்திற்கு போக சொன்னார். அருணாசலம் ஆசிரமத்திற்கு சங்கரியுடன் செல்லவில்லை. தனியாக தான் சென்றார். அன்று சென்னையில் வரலாறு காணாத மழை. மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருட்டி பேய் மழை கொட்டி கொண்டிருந்தது. நடக்கும் வழியெல்லாம் தவளைகளின் சத்தம். ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருந்ததால் எந்த வாகனங்களின் சத்தம் கூட இல்லை. தூரத்தில் தெரிந்த ஆசிரமத்தை சுற்றிலும் வேற்று நிலங்கள் தண்ணீரால் நிரம்பி மழையை பெற்று கொண்டிருந்தன. அத்தனை இருளிலும் அமைதியிலும் அவர் பகவான் ஆசிரமத்தில் உள்ள ஒரு குடிலில் பஜனை பாடல்களின் சூழலில் தன் உடைகளின் ஈரத்தை உணர்ந்தவராய் சுவரை ஒட்டி கடைசியில் அமர்ந்தார். எதிரே முழு இருட்டில் ஒரே ஒரு குத்து விளக்கின் அருகில் பகவானின் ஆறடி படம். வெள்ளை ஆடை அணிந்து கை நீட்டி அழைத்து கொண்டிருந்தார். எங்கிருந்து பார்க்கும் போதும் அவரையே பார்க்கும் கண்கள். பூக்களும் நறுமண பொருட்களும் சேர்ந்த ஒரு சுகந்த வாசனை. சொர்க்கம். மேளம் ஒலிக்க ஒலிக்க கம்பீரமான ஒரு குரல் அங்கு இருப்பவர்கள் அனைவரின் இதயத்திலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தி கொண்டிருந்தது. மெதுவான தாளகதியில் கொஞ்சம் கொஞ்சம் என்று மேலேறி ஜல். பின் கீழிருந்து மீண்டும் கொஞ்சம் கொஞ்சம் என்று மேலேறி…அருணாசலம் அங்கிருந்தவர்கள் அனைவருடன் சேர்ந்தும் ஆட தொடங்கினார். ஒரே ஒத்திசைவில் அனைவருடனும் சேர்ந்து, அசைந்து, நெகிழ்ச்சியான ஒரு கணத்தில் உடைந்து ஓவென்று அழ தொடங்கினார். பிறந்தது முதல் சேர்த்து வைத்த அனைத்தையும் வெளி தள்ளில் வேகத்தோடு ஒரு அழுகை. மழை பெய்து முடித்த வானம் போல மனம் பளிச்சென்று இருந்தது .வாரத்தில் ஒரு நாள் என்று அங்கு செல்ல தொடங்கிய அருணாசலம் மெல்ல மெல்ல அதை இரண்டு மூன்று என்று அதிகபடுத்தி, ஒரு கட்டத்தில் வாரத்தில் எல்லா நாட்களுமே அங்கு செல்லலானார். ஆறு மணிக்கே அங்கு சென்று பூஜைக்கான ஆயுத்தங்களை செய்வது, பூ அலங்காரம், மைக் செட் பக்தர்களை வரவேற்பது என்று ஆசிரமத்தின் இன்றியமையாத அங்கம் ஆனார். வீட்டிலும் பகவான் பேச்சுக்கள் அதிகமாக அருணாசலம் மெல்ல மெல்ல தன் சோர்விலிருந்து வெளி வர தொடங்கினார்.. அவரை தொடர்ந்து சங்கரியும் பவானியும் கூட ஆசிரமத்திற்கு வருகை தர தொடங்கினர். சங்கரிக்கு முதலில் அந்த பூஜை முறைகளும் பாட்டுக்களும் ஆட்டமும் பிடிக்க தான் இல்லை.”சங்கரி உனக்கும் பகவானுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவருக்கு தான் கடவுள் என்பது தெரியும், உனக்கு தெரியாது என்பதே. காம குரோத மோகங்கள் என்பவை கண்ணாடியின் மேல் உள்ள தூசாக நம் சுயத்தின் மேல் படிந்திருக்கின்றன. இவற்றை நீக்குவதன் மூலமே நாம் நம்முள் உள்ள பகவானை தரிசிக்கலாம்.” சங்கரிக்கு இதெல்லாம் புரியவேயில்லை. பக்தி என்ற பெயரில் பாவங்களை நினைத்து அழுவதும் ஆத்மா சுத்திகரிப்புக்காக வேண்டி கொள்வதும் அவளுக்கு அந்நியமாக இருந்தன. இருந்தாலும் அருணாசலம் மகிழ்ச்சியாய் இருப்பதை காண்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. இதை தொடர்ந்தே பவானியும் தன பெற்றோருடன் ஆசிரமம் செல்ல துவங்கினாள். தன் இயல்பான அறிவுத்திறனாலும் சூட்சுமத்தாலும் பவானிக்கு ஆன்மீக வகுப்புகளின் பாடங்கள் எளிதாக புரிந்தது. ஒரு தயக்கத்தோடு வரும் புதிய பக்தர்களை இவளால் எளிதாக பகவானின் தத்துவத்தை நோக்கி இழுக்க முடிந்தது. பல்வேறு மத நூல்களில் இருந்தும் சம காலத்தைய நிகழ்வுகளில் இருந்தும் உதாரணங்களை அள்ளி அவள் பக்தர்கள் முன்னால் வைக்கும் லாவகத்தில் எளிதாக அனைவரும் கவரப்பட்டனர்.பகவானை தன் கண்ணனாக பாவித்து கொண்டு சதா அவருடனான உரையாடலில் இருந்தாள். **** “இப்பொழுது நான் சொல்வதை நீங்கள் கவனத்துடன் கேட்க வேண்டும்” என்று தலைமை சீடரான போலந்து விஞானி ஆசிரமத்தின் ஒரு தனித்த அறை ஒன்றில் நாற்காலி மேல் அமர்ந்து , அருணாச்சலமும் சங்கரியும் கீழே அமர்ந்திருக்க முன்னால் குனிந்து சொல்ல தொடங்கினார்.”உங்கள் தாத்தா வாழ்ந்த வாழ்கையை எண்ணி பாருங்கள். படிப்பது,ஏதோ ஒரு வேலை செய்வது, குடும்பம் வளர்ப்பது, பிள்ளைகளுக்கு சேர்ப்பது, பின் கடைசி காலத்தில் இருமி சாவது..இதையே தான் உங்கள் தந்தையும் செய்த்திருப்பர்.சிறிய மாற்றங்களுடன் நீங்களும் செய்திருப்பீர்கள். நீங்கள் போன பின்பு உங்களை இங்கு யார் நினைவில் வைத்திருக்க போகிறார்கள். உங்கள் வாழ்க்கையால் நீங்கள் அடைந்ததும் பிறருக்கு கொடுத்ததும் என்ன?” பூஜ்யம் என்று சொல்லும் வண்ணம் அவர் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து முன்னால் கான்ம்பித்தார். “ஆனால் உங்கள் பெண் இந்த சமுதாயத்திற்கு ஒரு பெரிய சேவையை ஆற்ற வந்துள்ளார். பலர் உங்கள் பெண்ணை தங்கள் வாழ்நாள் தோறும் நன்றி பெருக்கோடு நினைவு கூற போகின்றனர். பெரும்பாலானோர் வாழும் சராசரி வாழ்க்கையில் இருந்து உங்கள் பெண் மேலழ போகிறாள். அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் தேவை.” **** வரும் வழியெல்லாம் அருணாச்சலமும் சங்கரியும் எதுவும் பேசி கொள்ளவில்லை. பகவானின் பிரதம சீடர்கள் ஐவரை தேர்ந்து எடுத்து உள்ளார்கள்.அனைவருமே பதினெட்டு முதல் இருபத்தி இரண்டு வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள். அவர்களுக்கு சந்நியாசம் அளிக்கப்பட்டு பகவானின் செய்தியை உலகம் எல்லாம் கொண்டு செல்ல போகிறவர்கள். இல்லற வாழ்கையை மேற்கொள்ளாமல் வாழ்கை முழுதும் துறவறம் பூண்டு வாழ போகிறவர்கள். பவானி அவள் ஒப்புதலை தெரிவித்த பின்னரே தங்கள் சம்மதத்தை வாங்க முயற்சித்துள்ளாள். இருந்தால் என்ன, ஒரு புனிதமான பணிக்கு தானே தன்னை ஒப்படைத்திருக்கிறாள். எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். ஒரு வாரம் கழித்து பகவானின் ஜென்ம தின கொண்டாட்டங்களோடு இந்த இளம் துறவிகளை அறிமுகபடுத்தும் விழாவும் நடந்தேறியது. ஒரு சிம்மாசனம் போன்ற இருக்கையில் பகவான் கண்களை மூடி மோன நிலையில் அமர்ந்திருக்க ஐந்து துறவிகளும் அவர் பின்னால் இருந்து பிரசன்னமாயினர். பவானியோடு சேர்த்து இரண்டு பெண்கள்.அனைவரும் ஒரே மாதிரியான வெள்ளை பைஜாமா குர்த்தா அணிந்து ஒரு பெரிய சால்வை அணிந்திருந்தனர். இரு வாலிபர்கள் கண்ணாடி அணிந்திருந்தனர்.மீசை மழித்து வழவழப்பான முகத்துடன் இருந்ததால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை. பவானியை கண்டதும் அவள் வெள்ளை உடையை கவனித்தார். பின் தலையின் மேல் முக்காடு இருப்பதை கவனித்தார். முடி முழுதும் மழிக்கப்பட்டு மொட்டையாக இருந்த தலையை கண்டதும் அவருக்கு என்னவோ செய்தது…காண வந்திருந்த அனைத்து பக்தர்களும் ஒரு சேர எழுந்து நின்று பகவான் பகவான் என்றபடி கோஷமிட்டு கரம் கூப்பினர்.பவானியை அங்கு அப்படி கண்டதும் அருணாச்சலத்திற்கு சொற்கள் எதுவும் எழவில்லை. அண்டம் எல்லாம் பூத்தாளை என்ற சொற்களாய் மாறி மனம் அரற்றி கொண்டே இருந்தது. சேதனா என்று நாமகரணம் சூட்டி, பவானி பக்தி-பரிணாம வகுப்புகள் எடுக்க தொடங்கினாள். நாலு நாட்கள் நீளும் இந்த வகுப்பில் பகவானின் ஆப்த வாக்கியங்களுக்கு அவள் சொல்லும் விளக்கவுரைகள் அதிகம் பேசப்பட்டன. அவர் கண்களை பார்த்து பக்தி கசிய இந்த அபலையை ஆட்கொள்ள மாட்டாயா என்ற ரீதியில் அவள் பாடும் பஜனை பாடல்களும் கேட்பவர்களை நெஞ்சுருக செய்தன. அருணாசலம் சங்கரி இன்னமும் அதிகமாக தங்களை பகவத் சேவைக்கு ஒப்பு கொடுத்தனர்.புதிய பக்தர்கள் பலர் ஆசிரமத்தில் குவிய துவங்கினர். ஆசிரமம் விரிவடைந்து சுற்றி உள்ள நிலங்கள் எல்லாம் ஆசிரமத்தின் பகுதியாய் ஆகின. பக்தர்களை வெவ்வேறு வகைகளாக பிரித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பயிற்சி முறைகள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பயிற்சிக்கும் ஆயிரக்கணக்கில் பணத்தை மக்கள் கொட்டி கொடுத்தனர். சின்னஞ்சிறு குடிலில் ஒரு எளிய பக்தி இயக்கமாக தோன்றியது மெல்ல கிளைகள் பரப்பி பிற மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் கூட பரவ தொடங்கியது. “என்ன இருந்தாலும் ஒரு சின்ன பொண்ண இப்படி சன்யாசினி ஆக்கிட்டீங்களே” என்று அவர் நண்பர்களிலும் உறவினர்களிலும் சிலர் கேட்டு கொண்டு தான் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருணாசலம் நீண்ட விளக்கங்கள் அளித்தார். இயேசு கிறிஸ்து பிறக்கும் போது அவருடன் இருந்த சொற்ப பேர்கள் இப்படி பட்ட பேச்சுகளுக்கு ஆளாகி இருப்பார்கள் என்று சொல்லி கொண்டார். பின் சில சமயம் கேட்பவர்களின் உள்ளீடற்ற வாழ்க்கையை பவானியின் அர்த்தம் பொதிந்த வாழ்க்கையுடன் ஒப்பிட்டு ஆசுவாச படுத்தி கொண்டார். ஆனாலும் பவானி வயதையொத்த உண்ணாமலைக்கு திருமணம் ஆகி ஒரு வயது குழந்தையோடு அவர் வீட்டிற்க்கு வந்திருந்த போது அவருக்கு மனதில் முட்டி கொள்ள தான் செய்தது. **************** மூன்று வருடங்கள் உருண்டோடின. ஒரு கட்டத்திற்கு மேல் பக்தர்கள் எண்ணிக்கை தேக்கத்தை அடைந்தது. விறு விறுவென்று வளர்ந்து கொண்டிருந்த இயக்கம் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு மந்த கதியில் இயங்க ஆரம்பித்தது.அந்த நேரத்தில் கடவுளை மறுத்து யோகத்தை முன்வைத்த சில குருமார்கள் பிரபலமடைய தொடங்கி இருந்தனர். படித்த வர்க்கத்தினர் அந்த வகையான குருமார்களை அதிகம் நாட தொடங்கினர். மூச்சு பயிற்சியும், யோகாசனமும் அவர்களின் வழிமுறையாய் இருந்தன. அதை ஒரு நாள் பார்த்து விட்டு வரலாமே என்று சென்ற அருணாசலம், பகவான் ஆசிரமத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த ஒரு ஆர்வமும், எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருந்ததை கவனித்தார். தங்கள் பிரச்சனைகளை யோகா தீர்க்ககூடும் என்று தேடுபவர்கள் ஒரு முனைப்போடு வந்து அங்கு பயிற்சி செய்து கொண்டிருப்பதை கண்டார். அதில் பழையவர்கள் யார், புதிதாய் வந்தவர்கள் யார் யார் என்று அவர்களின் உடல் மொழியே சொல்லி கொண்டிருந்தன.புதிதாய் வந்த சாதகர்களுக்கு அறிமுகம் கொடுக்க சிலர், பாடல்கள் பாட சிலர், பிரார்த்தனை கூடத்தை ஒழங்கமைக்கும் சிலர் என்று எல்லாமே அருணாசலத்திற்கு பழக்கமானவையாகவே இருந்தன. சின்ன சின்ன வித்தியாசங்களை தவிர்த்தால் எல்லாம் ஒரே மாதிரியாக தான் அவருக்கு தோன்றியது. ஆனாலும் அவருக்கு இந்த வகையான யோக பயிற்சிகள் இன்னும் சரியானவையாக தோன்றின. பகவானை பிரார்த்திப்பது, பாவங்கள் போக்குவது போன்றவற்றில் ஒரு பிழை இருப்பதாக தோன்றி கொண்டிருந்தது. அந்த எண்ணத்தை கட்டுபட்டுத்த முயற்சி எடுத்து கொண்டிருந்தார்… ஒரு நாள் வீட்டின் அருகே தேவராஜனை கண்டார். பகவான் மின்துறையில் வேலை பார்த்த போது அவருடன் இருந்து, பின் பக்தராக மாறி பகவான் பாடல்கள் இயற்றி கொண்டிருந்தவர்.அவரை ஆசிரமத்தில் பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டிருந்தன. “வரகூடாதுனு எல்லாம் இல்லை அருணாசலம். மின்சார துறை ஊழியராக அவர் இருந்ததில் இருந்தே அவரை அறிந்தவர் நான். எத்தனை பாடல்கள் எழுதி இருப்பேன் அவர் பேரில், உங்களுக்கு தெரியாதா? ஆனால் பண வரவு அதிகரிக்க தொடங்கியதும் எனக்கு ஆசிரமத்தில் இருந்து ஒரு விலக்கம் வந்துவிட்டது. பணத்திற்காக புதிது புதிதாக வகுப்புகளை அறிமுகபடுத்துவதும், முக்கிய பொறுப்புகளில் அவர் குடும்ப உறுப்பினர்களே அமர்த்தபடுவதும் எனக்கு சரியாக தோன்றவில்லை. போதாகுறைக்கு சன்யாச அமைப்பும் எனக்கு உவப்பானதல்ல”. ஏன் சார் அதுக்கு என்ன? அருணாசலம் இருதயம் துடிப்பது அவருக்கே கேட்டது. “வளரும் வயதில் இருப்பவர்களை துறவறம் மேற்கொள்ள வைப்பது எந்த வயதில் நியாயம். அவர்கள் தன் வாழ்கையின் எல்லா இன்பங்களையும் துறந்து இருக்க இவரது மகன் மட்டும் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வியாபாரம் செய்ய வேண்டுமா?” “ஆனால் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் இல்லையா சார்.” கேட்க நினைத்து வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கி கொண்டது. அதற்கு அடுத்த சில மாதங்களில் ஆசிரமம் வரி ஏய்ப்பு புகார்களில் சிக்கி மீடியா அதை பற்றி புலனாய்வு செய்து கட்டுரைகள் வெளியிட தொடங்கின. சிறிது உண்மையும் பெரும் அளவில் கற்பனையும் சேர்த்து முகப்பு கட்டுரைகள் வெளியிட்டன. கொஞ்ச அவரது நம்பிக்கை கட்டுமானத்தில் விரிசல விழ தொடங்கியது. அதை தக்க வைக்க ஆசிரமத்தின் பழைய ஆட்களில் ஒருவரான கோவிந்தனை சென்று சந்தித்தார். நீங்கள் இதில் குழம்பவோ சந்தேகப்படவோ எதுவுமே இல்லை அருணாசலம். இயேசு கிறிஸ்துவை அவர் வாழ்ந்து வந்த சமுதாயம் சிலுவையில் அறைய வில்லையா? அதனால் அவர் பொய் என்று ஆகி விடுமா? கடவுளாக இறங்கி வந்தவர்களுக்கே உரிய சாபம் இது. அவர்களை சுற்றி உள்ள சமூகம் இயன்ற வரையில் துன்புறுத்தவே செய்யும். இதையெல்லாம் வென்று பகவான் தன் அவதார மகிமையை உலகிற்கு வெளி காட்டுவார் பாருங்கள். வரி ஏய்ப்பு கட்டுரைகளை தொடர்ந்து அடுத்த கட்டமாக பத்திரிகைகள் துறவிகளை குறித்து கதைகள் வெளியிட தொடங்கின. எந்த வித ஆதாரமும் இல்லாமல் பாலியல் புகார்களும் கிளப்பி விட பட்டன. முதன்மை சீடரான அந்த போலந்து விஞ்ஞானி திடீரென்று தலைமறைவானார். பகவான் இருப்பிடமும் இரகசியமாகவே வைக்கப்பட்டது. அருணாச்சலத்தின் வாழ்கையின் மிக குழப்பமான நாட்கள் அவை.அவர் தன் நம்பிக்கையை வலுப்படுத்த கூடிய மனிதர்களை தேடி சந்தித்து கொண்டே இருந்தார். பத்திரிகைகளில் வரும் பிழைகளை இருட்டடிப்புகளை கண்டுபிடித்து ஒவ்வொருவரிடமும் அது குறித்த நகைச்சுவைகளை நடித்து காட்டினார். ஒருவருக்கும் அது ஹாஸ்யமாக தோன்றவில்லை. பத்திரிகை ஆபிஸ் முன் அமைதி போராட்டங்களில் பங்கெடுத்தார். லெட்டர்ஸ் டு தி எடிட்டர் எழுதினார். சந்திக்கும் நண்பர்களிடம் எல்லாம் பகவான் குறித்து மேலும் மேலும் வேகத்துடன் பேசி அவர்கள் கண்களில் நம்பிக்கையின் சிறு கீற்றை கண்டாலும் உள்ளுக்குள் மிகவும் மகிழ்ந்தார். கொஞ்ச கொஞ்சமாக மீடியா இந்த விஷயங்களை மறந்துவிட்டது. ஜென்ம தின வைபவங்களில் ஆயிரகணக்கில் கூடும் பக்தர் கூட்டம் இப்போது வெறும் நூற்றுகணக்கில் மட்டுமே கூடியது. ஐந்து துறவிகளில் ஒருவர் லௌகீக வாழ்விற்கு திரும்ப,, அருணாச்சலமும் பவானியை திரும்ப அழைக்க முயற்சிகள் செய்தார். பவானி மறுத்து விட்டாள். போலந்து விஞ்ஞானி இருந்த இடத்தை பகவானின் தம்பி எடுத்து கொண்டார். அவரும் கனலாக இருந்த பக்தியை ஊதி ஊதி நெருப்பாக ஆக்க தன்னால் ஆன முயற்சிகளை செய்தார்.பஜனைகளும் ஆடல்களும் முன் போலவே இருந்தாலும் அவற்றில் ஒரு வேகம் இல்லாததை அனைவரும் உணர்ந்தே இருந்தனர். பவானி ஆண்டாளாகி கண்ணனை நோக்கி மெய்மறந்துஎப்பொழுதும் போல் பாடி கொண்டே இருந்தாள். அனைவருள்ளும் கடலாக பரவி எழுச்சி கொண்டு ஆட வைக்கும் ஒரு பக்தி நிலையை எதிர்நோக்கி அனைவரும் காத்து கொண்டே இருந்தனர். மனம் மிக பலவீனமான ஒரு மழை நாள் இரவில் அருணாசலம், “தப்பு பண்ணிட்டோமோ சங்கரி” என்று உடைந்து போய் அவள் மடியில் விழுந்து கதறினார்.. பின் தன் உள சக்தி முழுவதையும் திரட்டி எஞ்சி இருந்த நம்பிக்கைக்கு நீருற்றினார். பெரும்பாலானோர் வாழ்கின்ற உள்ளீடற்ற வாழ்கையை பவானியுடன் ஒப்பிட்டு ஒரு க்ஷண நேரம் பெருமிதம் கொள்ள நினைத்து அதுவும் தோல்வி அடைய எந்த உணர்ச்சியும் இல்லாது தூங்க போனார். - See more at: http://solvanam.com/?p=26133#sthash.TM6aGaUP.dpuf

Thursday, 27 December 2012

அப்பா

 
 
ராஜ் என்று எங்களால் அழைக்கப்படும் ராஜேஷ் படேல் கென்யாவில் பிறந்து இடி அமீன் காலத்தில் நாடு துரத்தப்பட்டு லண்டனில் வந்து குடியேறியவர்.கென்யாவில் அவர் இருந்தது அதிகபட்சம் ஐந்து வயது வரை தான். அதன் பின் முழுவதும் லண்டன் வாசம். அவரது தந்தை பிறந்த ஊரான சூரத்தை அவர் எப்பொழுதாவது செல்லும் இந்திய விடுமுறையில் காண்பதுடன் சரி. ஆனாலும் அவர் தன்னை ஒரு குஜராத்தியாகவே உணர்ந்து வாழ்ந்து வந்தார்.பேச்சு,நடை, உடை, பாவனை எல்லாம் ஒரு குஜராத்தி தான். நாற்பது வருடங்களுக்கு மேல் இங்கிலாந்தில் வாழ்ந்து, சைவ உணவை உண்டு, குஜராத் சென்று ஒரு பெண்ணைத் தேடிப் பிடித்து மணந்து,கோட்டும்,தொப்பியும் அணிந்து,ரோட்டில் தெரிந்தவர் யாரவது எதிர்பட்டால் அந்த தொப்பியை தூக்கி முன்னால் குனிந்து முகமன் கூறி,உடனே பருவ நிலையை பற்றியோ அல்லது ஃபுட்பால் பற்றியோ பேசத் தொடங்கும் ஆங்கிலோ குஜராத்தி. அவரது முன் வழுக்கையும், உருண்டையான உருவமும், தங்கச் சட்டம் உள்ள கண்ணாடியும் அவருக்கு எந்த ஒரு தமிழ் படத்திலும் கௌரவ வேடத்தை ஈட்டி தந்து விடும். என்ன உயரம் சற்றே கம்மி. நாலரை அடி.
இந்தியாவில் இருந்து ஒரு ஐ.டி கம்பனியின் மூலமாக லண்டனில் ஒரு செல்ஃபோன் கம்பெனியில் ப்ரோக்ராமிங் வேலைக்கு அமர்த்தபட்டிருக்கும் எனக்கும், என் போன்ற இன்னும் ஒரு நான்கு பேருக்கும் அவர் தான் மேலாளர். அந்த செல்ஃபோன் கம்பனியின் மிக முக்கியமான பொறுப்பில் அமர்த்தப்பட்டு இருந்தார்.அந்த கம்பனியின் மேல் மட்டத்துடன் பேசி, அவர்களின் தேவையை அறிந்து எங்களிடம் சொல்ல, அதை நிரலிகளாக மாற்றி தரும் பொறுப்பு எங்களுடையது. அவர் சொல்வதை நாங்கள் அப்படியே இந்தியாவில் என் போன்று இருக்கும் என் போன்ற சிலருக்கு அனுப்பி அது அங்குள்ளவர்களால் வடிவமைக்கப்பட்டு இங்கு திரும்பி வரும். திரும்ப வரும் நிரலிகளை சரி பார்த்து அதை அந்த செல் போன் கம்பனியின் இயங்கு தளத்தில் பொருத்தி,அவர்களுடைய வலைதள சேவையை மேம்படுத்துவது எங்கள் பொறுப்பு. இங்கு இருக்கும் ஒருவருக்கு சென்னையில் ஐந்து பேர் வீதம் என்று கணக்கு. சென்னையில் இருப்பவர்களுக்கு சம்பளம் குறைவு. ஆகவே செல்ஃபோன் கம்பெனிக்கு லாபம் அதிகம். இங்கு இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகம். ஆனால் லண்டன் கிளையிலும் சிலர் இருந்தே ஆக வேண்டும். இல்லையேல் வேலை நடக்காது.
 
ராஜ் கீழே இரண்டு வெள்ளையர்கள் வேலை செய்து வந்த போதிலும் அவர் மதியம் எப்பொழுதும் எங்களுடனே சாப்பிட வந்தார். ஒவ்வொரு மதியமும் சரியாக ஒரு மணிக்கு எங்கள் மேஜை அருகே வந்து ‘கமான் இட்ஸ் லஞ்ச் டைம்,’ என்று முட்டியை மடித்து, தொந்தியை அசைத்து அவர் சொல்வது எங்களுக்குச் சிரிப்பை வரவழைப்பதாகவே இருந்தது. சோனலும்,ராதிகாவும் அந்த அசைவிற்கு ஒவ்வொரு முறையும் தேவைக்கு அதிகமாக சிரிப்பது போல் தோன்றும். சோனல் பஞ்சாபை சேர்ந்தவள். மிடுக்கும், தோரணையும் கூடியவள். ராதிகாவின் கணவர் லண்டனில் மேற்படிப்பு படித்து வந்தார். அதற்கான பணம் ராதிகாவின் லண்டன் வேலையில் இருந்து சென்று கொண்டிருந்தது. ஆக ராதிகா லண்டனில் இருந்து சம்பாதித்தாக வேண்டிய கட்டாயம்.எங்கு உடனடியாக இந்தியா அனுப்பி விடுவார்களோ என்ற நிரந்தர அச்சத்தில் வாழ்பவள். அதனால் அவள் சற்று அதிகமாக சிரித்து ராஜை மகிழ்விக்க நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ராஜ் உடனான இந்த மதிய உணவு பரஸ்பரம் இந்தியா பற்றியும் இங்கிலாந்து பற்றியும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு நிகழ்வாகவே இருந்தது. இந்தியா ஷைனிங் என்பது அவர் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு தொடர். ’நீங்கள் ஏன் இந்தியாவில் ஒரு வியாபாரம் தொடங்க கூடாது? இங்க வந்து ஏன் கஷ்டப்பட வேண்டும்’ என்ற கேள்விக்கு நாங்கள் தினந்தோறும் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம்.எங்கள் உரையாடல்கள் எப்பொழுதும் அவரை மையம் கொண்டதாகவே இருக்கும். ஒன்று, அவர் வயதின் காரணமாக அவருக்கு அந்த முக்கியத்துவம் இருந்தது. இரண்டாவது, எங்கள் நிறுவனத்திடம் எங்களைப் பற்றிப் புகார் கூறி, எங்களை மறுபடி இந்தியாவிற்குக் கூட அனுப்பும் சக்தி அவருக்கு இருந்தது என்றும் நாங்கள் அறிந்திருந்தோம். என்னுடன் வந்த பழனிச்சாமி திடீரென்று ஒரு நாள் திரும்ப அனுப்பபட்டான். அதற்கு ராஜ் தான் காரணம் என்று ராதிகா என்னிடமும் சோனலிடமும் சொல்லிக் கொண்டே இருப்பாள். அதன் பின் ராஜின் நகைச்சுவைகளை அவள் இன்னும் அதிகமாக சிரித்து வியந்தது போல் தோன்றியது. அவள் பயம் அவளுக்கு. ராஜ் என்றும் போல் இருந்தார். தொந்தியை அசைத்து, முட்டியை மடக்கி, இட்ஸ் லஞ்ச் டைம் என்று.
 
அவருக்கு மூன்று பெண்கள். பதினான்கு, பத்து மற்றும் எட்டு வயதுகளில். எனக்கு பெண் குழந்தை பிறந்த போது மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்து சொன்னார். பெண் குழந்தை ஒரு வரம் என்று அவ்வபோது என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு போவார் .ஒரு முறை ஆபிஸ் பார்ட்டியில் அவர் பெண்களை பார்த்தேன். இருவர் மட்டுமே அன்று இருந்தனர். அவர்கள் அப்பா சொல்வதற்கெல்லாம் எதிர்ப் பேச்சு பேசியபடியே. ”அது அப்படி இல்லை, அம்மா,” என்று இவரும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பார். இரண்டாவது குழந்தை எப்போது என்று எப்போதாவது என்னிடம் கேட்பார். பின்னர், சீக்கிரம் ஒன்று பெற்று கொள்,உங்கள் காலத்திற்குப் பின்னும் உன் பெண்ணிற்கு ஒரு துணை வேண்டாமா என்பார். இந்தியாவா, இங்கிலாந்தா என்ற பேச்சு வரும் போதெல்லாம், அவர் என்னை உன் பெண்ணிற்கு விவரம் தெரியும் முன் இந்தியாவிற்குச் சென்று விடு என்பார். “இதோ பார். நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் இவர்கள் உன்னை ஒரு சக ப்ரிட்டிஷ்காரனாக ஏற்று கொள்ளப் போவதில்லை. இவர்கள் கண்ணில் எப்போதும் நீ ஒரு மூன்றாம் உலக நாட்டுக்காரன் தான். உன் பெண்ணின் நிலையை யோசித்துப் பார்த்தாயா? நம் குழந்தைகள் இரு பக்கத்திலும் இல்லாமல் ஒரு நிரந்தர ஊசலில்தான் இருந்து கொண்டிருக்- கிறார்கள். என் போன்றவர்களின் பெரிய பயம் என்ன என்று உனக்கு தெரியுமா என்று அந்த சாப்பாட்டு மேஜையில் சற்றே முன்னே வந்து என் கண்களைப் பார்த்து கேட்டார். என் பெண் ஒரு ஆங்கிலேயனையோ ஒரு ஆப்பிரிக்கனையோ மணம் செய்து கொண்டு விடுவது தான். அதையே நான் என் வாழ்க்கையின் பெரிய பயமாக நினைக்கிறேன். அந்த நாளும் அந்த வார்த்தைகளும் நெடு நாட்கள் வரை என் நினைவில் இருந்து மறைந்து போயிற்று. பின் பல வருடங்கள் கழித்து அவர் முதல் பெண் ஒரு பிரிட்டிஷ் பாக்கிஸ்தானியனை திருமணம் செய்து கொண்ட செய்தி கேள்வி படும் வரை.
இந்தப் பேச்சுக்கள் நடந்து பின் சில மாதங்கள் கழித்து ராதிகாவின் பொறுப்பில் இருந்த ப்ரொஜெக்டில் பெரிய குளறுபடி ஒன்று ஏற்பட்டு அதனால் எங்கள் நிறுவனத்திற்கும் அந்த செல் ஃபோன் கம்பனிக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டது. ராதிகா முகம் சில நாட்களுக்குப் பேய் அறைந்தது போல் இருந்தது. அந்த தவறுக்கு அவள் இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பப்படுவாள் என்று பரவலாக பேசப்பட்டது. ராஜ் எங்களுடன் மதிய உணவிற்கு வருவதை நிறுத்தினார். மிகுந்த சோர்வுடன் சென்று கொண்டிருந்த தினங்கள் அவை. குறிப்பாக ராதிகாவிற்கு.
 
அந்த நாட்களில் ஒரு மழை நாள் இரவில், அருகில் இருந்த ஒரு பப்பில் நாங்கள் கூடும் ஒரு வாய்ப்பு அமைந்தது. எங்களுடன் சேர்த்து மற்ற டீமில் இருந்த சிலரும் வந்திருந்தனர். சில வெள்ளையர்களும். அன்று பீரும் வைனும் விஸ்கியும் வழிந்தோடியது. சோனல் அவள் அளவில் நிறுத்தி கொண்டாள். நான் ராதிகாவை கவனித்து கொண்டிருந்தேன். அவள் அமர்ந்திருந்தது ராஜின் மிக அருகே. நிறைய குடித்து கொண்டிருந்தாள்.எனக்கும் சற்று அதிகமாகி விட்டது. அந்த இருட்டிற்க்கும் மிதமான வெளிச்சத்திற்கும். ஆமாம், நான் பார்ப்பது சரிதானா. ராதிகா ராஜ் அருகில் அமர்ந்து அவர் காதுகளில் சென்று மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தாள். அவள் முழங்கைகள் ராஜினுடயதை அவ்வபோது உரசி சென்றன. தலையை உதறினேன். அவர் சொல்லும் நகைச்சுவைக்கு அவர் முகத்தின் மிக அருகே சென்று சிரித்தாள். அவள் கை எங்கே? ராஜ் தொடை கால்களிலா இருக்கிறது? என்ன செய்கிறாள் இவள்? நான் சோனலை பார்த்தேன். அவளும் புரிந்தது போல் என்னை பார்த்தாள். ஒன்று போதை அதிகமாயிருக்க வேண்டும் இல்லை அவள் இந்திய போவதைத் தள்ளி வைக்க ராஜ் மூலமாக எதோ முயற்சி செய்கிறாள். அடிப்பாவி. உனக்கு ஏன் இப்படி. நீ என்ன செய்கிறாய். உன் பணத் தேவை, நீ இங்கு இருந்து ஆக வேண்டிய கட்டாயம் நான் அறியாதது இல்லை. வேலைக்கு சென்று எங்களைப் படிக்க வைத்தாள் என் அம்மா. காலை ஏழு மணிக்கெலாம் பேருந்து பிடிக்க ஓடுவாயே…இரவு ஏழு மணிக்கு திரும்பி வந்து சமைத்து, சுத்தம் செய்து, பாடம் சொல்லி கொடுத்து, பின் மறுநாள் காலையில் ஐந்து மணி..இப்படியாக எத்தனை வருடங்கள். எத்தனை மேலாளர்கள்..எவ்வளவு அவமானங்கள்.தாயே நீ என்ன செய்கிறாய்..
 
 
இப்படியாக சென்று கொண்டிருந்த எதோ ஒரு கணத்தில் ராஜ் “சரி நாம் இதோடு முடித்துக் கொள்ளலாமா என்று எல்லோரையும் நோக்கி சத்தமாக கேட்டார். இதற்குள் ராதிகா சற்றே அதிகமாகி நிலை தவறி அவர் தோள்களில் முழுவதுமாக சாய்ந்து விட்டாள். அப்போது ராஜ் டீமில் வேலை பார்த்த வெள்ளையன் ஒருவன் அருகே இருப்பவர்கள் மட்டும் கேட்குமாறு அசிங்கமாக எதோ சொல்ல, ‘வாயை மூடு’ என்ற அவரது குரல் அந்த சூழலின் சத்தத்தை மீறி ஒலித்தது. பின் அவர் ராதிகாவை வீட்டிற்கு கொண்டு செல்லும் படி சோனலிடம் சொன்னார். நாங்கள் நால்வருமாக அருகில் இருந்த பஸ்ஸ்டாண்ட் வரை நடந்து சென்றோம். ராஜ் அவருடைய சின்ன உருவத்தால் ராதிகாவைக் தாங்கி கொண்டு கால்களை இழுத்து இழுத்து சென்று கொண்டிருந்தார். ராதிகாவால் சில அடிகளுக்கு மேல் நடக்க முடியவில்லை. எங்களை டாக்ஸி பிடித்து கொண்டு வர சொல்லி அவர் ராதிகாவை அங்கு இருந்த ஒரு இருக்கையில் அமர்த்தி கொண்டார்.நாங்கள் அலைந்து திரிந்து டாக்ஸி கொண்டு வர அரை மணி நேரம் மேல் ஆனது. நாங்கள் வரும் போது தூரத்திலிருந்து முழுவதும் இருட்டு நிறைந்த அந்த சூழலில் இவர்கள் இருக்கையின் மேல் மட்டும் ஒரு விளக்கு இருந்தது. அவள் முற்றிலும் நினைவில்லாமல் ராஜின் மடி மீது படுத்து கொண்டிருந்தாள். அவர் அவள் உச்சந்தலையில் கை வைத்தவாறு வானத்தில் அண்ணாந்து பார்த்து உட்கார்ந்திருந்தார்.சோனல் என்னை பார்த்து புன்னகைத்தாள். நாங்கள் ஒரு தந்தையை கண்டு கொண்டிருந்தோம்.

Thursday, 19 January 2012

அம்மா

முதல் சிறுகதை. சொல்வனத்தில் வெளியானது.
http://solvanam.com/?p=18817

பிரசாத் வெள்ளிகிழமை மாலை ஐந்து மணிக்கெல்லாம் டிரஸ் எடுத்து வைத்துக்கொண்டு தயாராகி விட்டான். சனிக்கிழமைக்கு ஒன்று. ஞாயிற்றுக்கிழமைக்கு ஒன்று என்று தனக்குள் சொல்லி கொண்டான். அம்மா ஆபிசில் இருந்து வந்த உடனே சொல்லிக்கொண்டு கிளம்ப வேண்டும்.மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டுமே விடுமுறை. அப்போதெல்லாம் தவறாமல் அவன் பாட்டி வீட்டிற்குச் செல்வது வழக்கம். இந்த முறை செல்வதும் எப்பவும் போல் சந்தோஷமாக இருந்தது. வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் போய் உட்கார்ந்தான். 24 வீடுகள் கொண்ட குடியிருப்பு அது. அவன் வீட்டில் அவன்தான் முதலில் வருவான். ஐந்தேகாலுக்கு அம்மா வருவாள். அப்பா வருவதைச் சொல்லவே முடியாது. சில சமயம் மதியமே லீவ் போட்டு வந்து படுத்துக்கொள்வார். சில சமயங்களில் இரவு பத்து பதினொன்று கூட ஆகும். மணி இப்போ அஞ்சு அஞ்சு. இன்னும் அம்மா வர பத்து நிமிஷங்கள் உள்ளன. பத்து நிமிஷங்கள். பத்தாம் வாய்ப்பாடு எவ்ளோ ஈசி என்று அவனுக்கு தோன்றியது. பதினஞ்சு கூட பரவாயில்லை. இந்த பதிமூணு பதினேழு எல்லாம்தான் எவ்ளோ மனப்பாடம் செஞ்சாலும் மனசுல நிக்கறது இல்ல. இன்னொரு முறை மணி பார்த்தான். இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு.

சாதாரணமாக ஸ்கூல் விட்டு வந்ததும் வீடு பூட்டிவிட்டு வாசலில் விளையாட போய் விடுவான். ஹரி, கோபி எல்லாம் அவனுக்கு பிரண்ட்ஸ். மதன், வசந்த் கூட எல்லாம் சேர வேண்டாம் என்று அம்மா சொல்லி இருந்தாள். கோபி அம்மா ஸ்கூல் டீச்சர். அதுவும் அவன் படிக்கற ஸ்கூலிலேயே. நல்ல வேளை பிரசாத்திற்கு அவர்கள் பாடம் எதுவும் எடுக்கவில்லை. ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சர் என்று கேள்விப்பட்டு இருக்கிறான். கோபி அப்பா கூட அவருக்கு பயப்படுவார் என்று அம்மா சிரித்துக்கொண்டே சொல்லுவாள். அப்பா போய் எங்கயாவது பயப்படுவாளா? இன்னும் கொஞ்ச நேரத்துல சன் முழுக்க செட் ஆயிடும். சூரிய வெளிச்சம் பூமியை வந்து சேர்வதற்கு எட்டு நிமிடங்கள் ஆகும் என்று அவனுக்கு ஞாபகம் வந்தது. இந்த விஷயம் எல்லாம் எவ்ளோ பேருக்கு தெரியும். சேகருக்குக் கூட தெரியாது. இத்தனைக்கும் அவன்தான் கிளாஸ்லேயே பணக்காரன்.

தூரத்தில் அம்மா நடந்து வருவது பார்த்து ஓடினான். பக்கத்தில் போய் கையைப் பிடித்துக்கொண்டான். அம்மா கட்டிக்கொண்டு கன்னத்தைக் கிள்ளினாள். உள்ளே வந்தவுடன் “பாட்டி வீட்டுக்குக் கிளம்பறேன் மா” என்றான். “அதுக்குள்ளேயேவா? இருட்டிண்டு இருக்கே நாளைக்கு போகலாம்” என்றாள். “போ..இப்பவே போவேன்” என்றான். 24a பிடித்தால் கடைசி நிறுத்தம் வெஸ்ட் பஸ் டிப்போ. அங்கிருந்து பக்கத்து தெரு ஓரமாக நடந்தால் மூணாவது திருப்பத்தில் பாட்டி வீடு. அவன் நிறைய முறை போய் இருக்கிறான். “அப்பா என்ன சொல்லுவா மா?” என்றான். “ஒண்ணும் சொல்ல மாட்டார் நான் பாத்துக்கறேன், ஆனா ஞாயித்துகிழம சீக்ரம் வந்துடனும் என்ன?” “ஓகே மா” என்று பையை எடுத்துக்கொண்டு செருப்பு போட்டுக்கொண்டு ஓடினான். பிறகு எதோ தோன்றியவன் போல் திரும்பி வந்து “அப்போ அப்பா திட்டினா” என்றான்.”நான் பாத்துக்கறேன் போடா” என்றாள் அம்மா.

பாட்டி வீடு பக்கத்தில் சரவணணும் மணியும்தான் அவனுக்கு க்ளோஸ் பிரண்ட்ஸ்.ரெண்டு பேர் கிட்டயும் வீடியோ கேம் இருக்கு. ஆனா மணிதான் கஞ்சன். பிரசாத்திற்கு விளையாடத் தரவே மாட்டான். அவன் போனபோது பாட்டி ஸ்ரீராமஜெயம் எழுதி கொண்டு இருந்தாள். மாமா ஆபிசிலிருந்து வந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். பாட்டி உட்கார்ந்திருந்த இடத்திற்கு மேலே தாத்தா படம் மாட்டி மாலை போட்டிருந்துது. அந்த மலை வாடவே வாடாது என்று பாட்டி சொல்லி இருக்கிறாள். போனவுடன் பாட்டி மடியில் படுத்துக்கொண்டான். பாட்டி தலையை கோதிக்கொண்டே “அம்மா ஆபீஸிலிருந்து வந்தாச்சா?” என்று கேட்டாள். “உங்க அப்பங்காரன்”. “ம்ம் ஹும்.. அவன் வெள்ளிகிழம என்னிக்கு நேரத்தோட வந்திருக்கான். என் பொண்ணு உசுர…” அதுக்குள்ளே மாமா “அம்மா” என்று கத்தினார். “விளக்கு வெச்சப்றம் இப்டி அழுது பிராணன் வாங்காதே. ஏற்கனவே தரித்தரம் தாண்டவம் ஆடறது.”

பிரசாத் உடனே புறப்பட்டு சரவணா வீட்டுக்கு போனான். சரவணா டென்னிஸ் கிளாஸ் கூட போறான். அவன் அப்பாவே கொண்டு விடுவார். அம்மா டாக்டர். அவன் வீடியோ கேம்தான் ஆட வந்திருக்கான் என்று சரவணனுக்கு தெரியும். ஆனா அவன் மாட்டுக்கு டிவி பாத்துண்டு இருக்கான். அவன் அம்மாவும்தான் ஆபிஸ் போறா. ஆனா இவன பாத்துக்கவே தனிய ஒரு ஆயா. ஆயா சாதத்துல கொழம்ப போட்டு கொழச்சு அவனுக்கு வாய்ல ஊட்டி விடறா. பிரசாத் தலையை திருப்பிக்கொண்டான். டிவில இங்கிலீஷ் படம் எதோ ஒண்ணு. நல்ல வேளை. சீக்ரம் முடிஞ்சிது. பிறகு வீடியோ கேம் செட் பண்ணி ஆடஆரம்பித்தனர்.

கார் ரேஸ் விளையாட்டு. சரவணனுக்கு நல்ல பழக்கம் இருந்ததால் அவனால் சீக்கிரமே ஜெயிக்க முடிந்தது. பிரசாதிற்க்கு அந்த இயக்குபிடியை சரிவர கையாள முடியவில்லை. ஆனால் அடுத்து வந்த செஸ் விளையாட்டில் பிரசாத் எளிதாக ஜெயித்தான். கொஞ்ச நேரம்தான் விளையாடின மாதிரி இருந்தது. அதுக்குள் பாட்டி குரல் கேட்டது. சாப்பிட்டு போய் விளையாடுடா என்றார் பாட்டி. பிரசாத்திற்கு கோவமாய் வந்தது. பாட்டி பக்கத்தில் போய் “ஏன் இவ்வளவு சீக்கிரமா வந்து தொலைக்கற?” என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்டான். ஆனால் பரவாயில்லை. சாப்பிட்டு வந்து கூட விளையாடலாம். பதினோரு மணி வரை வெளியில் இருக்கும் சுதந்திரம் இங்கு உண்டு. மாமாவும் ராத்திரி தூங்க நேரம் ஆகும். திரும்ப சரவணா வீட்டிற்குக் கூட வரலாம். அவன் அப்பா திட்டவே மாட்டார். அவர் வந்தா சரவணா அம்மா பயப்படறது இல்ல. அந்த அழுகிப்போன திராட்சை வாசனை வரது இல்ல. சாராயம் குடிச்சா அந்த வாசன வரும்னு அவனுக்குத் தெரியும். அதனாலதான் அவன் அப்பாகிட்ட அந்த வாசன எப்பவும் வரதும்னும் அவனுக்கும் தெரியும். ஆனா இத அவன் அம்மாகிட்ட கேக்கிறது இல்ல. கேட்டா அம்மா அழுவானும் அவனுக்கு தெரியும்.

சரவணா வீட்டிலிருந்து பாட்டி வீட்டிற்கு போக ஒரு சின்ன ரோடு நடக்க வேண்டும். அவன் வெளியில் வந்ததும் கரண்ட் போனது. உடனே ஹோவென கூச்சல் கேட்டது. அவன் நண்பர்கள்தான். அவனும் உடனே கத்தினான். ஒரே இருட்டாக இருந்தது. நிலா வெளிச்சத்தில் பார்க்கவும் முடிஞ்சது. மரத்துக்குக் கீழ இலை கருப்பு கருப்பா அசையறது. அவனுக்கு முன்னாடி பாட்டியோட நிழல். பக்கத்துல அவனோட நிழல். பெரிசா. பாட்டி இங்க பாரேன் என்றான். இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு ஆ..ஹை… ஆ..ஹை… ஆ..ஹை…என்று இடுப்பை முன்னால் ஒரு தள்ளு தள்ளிக்கொண்டு குதித்துக்கொண்டு வந்தான். பாட்டி இங்க பாரேன் என்று இன்னொரு முறை செய்தான், பாட்டி பார்க்கவே இல்லை, பாட்டி இன்னைக்கு எனக்கு புடிச்ச சேனை கிழங்குதானே என்று கேட்டான். அதற்கும் பாட்டி பதில் சொல்லவே இல்லை. சாப்பிட்டு முடித்து கரண்ட் வரணுமே என்று நினைத்து கொண்டான். ஆனால் சாப்பிட்ட பிறகு அப்படியே தூங்கிப்போனான்.

சனிக்கிழமை முழுக்க கிரிக்கெட் விளையாடி விட்டு ஆறு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வந்தான். அன்று சித்ரா பெரியம்மா, பெரியப்பா அவா பொண்ணு ரோஷனி எல்லாரும் வருவதாக இருந்தது. அம்மாவோட அக்கா இந்த பெரிம்மா. அம்மா தம்பி, மணி மாமாக்கு இன்னும் கல்யாணம் ஆகவே இல்ல. கல்யாணம்னாலே கஷ்டம்தான்னு பாட்டி சொல்லுவா. ஆனா பெரிம்மா எல்லாம் எப்பவும் சிரிசிண்டேதான் இருக்கா. பெரிப்பாக்கு எதோ ப்ரோமொஷன் வந்திருக்காம். அதப் பத்திதான் பேசிண்டே இருக்கா. பெரியப்பா பிசிக்ஸ் எல்லாம் எப்படி படிக்கறேன்னு கேக்கறார். ஆறாவது கிளாஸ்ல இருந்துதான் பிசிக்ஸ்… அடுத்த வருஷம்தான். பெரியப்பாக்கு பிசிக்ஸ் நல்லா தெரியும். நல்லா இங்கிலீஷ் பேசுவார். கேமரா வெச்சு நெறைய ஃபோட்டோ கூட எடுப்பார். ரோஷனி எப்பவும் போல அதிகம் பேசவே இல்ல. அப்பாவோட ஒட்டிண்டே அமைதிய இருந்தா. அவா கிளம்பின அப்பறம் நல்ல மழை. நல்ல இருட்டு வேற. எதிர்ல இருக்கற மைதானத்துல சோனு மழை விழுந்துண்டு இருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு தவளை எல்லாம் கத்தற சத்தம். இலை மேல விழும்போது படபடனு ஒரு சத்தம். தேங்கி இருக்கற தண்ணீல விழறது வேற மாதிரியான சத்தம். எப்போவாவது ஹெட் லைட் போட்டுண்டு போற கார் போகும். அப்போதான் மைதானத்துல விழற மழை கண்ணுக்குத் தெரியும். எல்லோரும் தூங்கப் போயிட்டு ரொம்ப நேரத்துக்கு அப்பறமும் இருட்டுல மழை மட்டும் கேட்டுண்டு இருந்தது. இப்படி பாட்டி கூடவே இருந்துட்டா எவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு நெனச்சப்போ லேசா நெஞ்சு முட்டிண்டு ஒரு அழுக வந்துது.

மறுநாள் சாயங்காலம் வீட்டிற்கு கிளம்ப தயாரானான். துணியுடன் சேர்த்து பாட்டி கொடுத்த மாதுளம்பழமும் எடுத்துக்கொண்டான். பாட்டி ஒரு தடவை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தாள். பாட்டி கிட்ட எப்பவும் இந்த விக்கோ வஜ்ராதந்தி வாசன. அவனுக்கு அப்போ அது புடிச்சு இருந்துது. மாமா அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டுவிட்டுச் சென்றார். அப்போவே கொஞ்சம் இருட்டத் தொடங்கி இருந்தது.பஸ்ஸிற்கு நீண்ட நேரம் காத்திருந்தான். எதிரில் ஒரு புது ஹோட்டல் வாசலில் லைட் தோரணம் எரிந்து எரிந்து அணைந்தது. எப்பவும் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் பூக்கார அம்மா இன்றும் இருந்தாள். கொஞ்ச நேரத்தில் பஸ் வந்து விட்டது.

வீட்டின் அருக போகும் போதே உள்ளே லைட் எல்லாம் அணைந்திருந்தது தெரிந்தது. அவன் ஹால் ஜன்னல் பக்கத்தில் போய் மெதுவாக “அம்மா” என்று குரல் கொடுத்தான். அம்மா ஜன்னல் அருகே வந்து “இரு இரு” என்றாள். கதவைத் திறந்து, “ஏன் இவ்ளோ லேட்? சீக்கிரம் வரதுதானே?” என்றாள். அம்மா குரலே வெளியில் வரவில்லை. காத்து மட்டும் வந்து வந்து ஒலி எழுப்பி கொண்டிருந்தது. உள்ளே அந்த அழுகிப்போன பழ வாசனை அடித்தது. அம்மா பிளாஸ்டிக்கில் மணிகளைக் கோர்த்து தோரணம் மாதிரி செய்து வைத்திருப்பாள். அது எல்லாம் அறுக்கப்பட்டு கீழே சிதறி இருந்தது. “என்ன அம்மா சண்டயா?” “அதெல்லாம் ஒன்னும் இல்ல. படு…” “இப்பவே எப்டிமா படுக்க முடியும்?”ஆனால் படுத்துதான் ஆக வேண்டும் என்பது அவனுக்கு தெரியும். எதோ பெரிசா சண்டை வந்திருக்கு. எதிரில் இருந்த பிள்ளையார் லக்ஷ்மி சரஸ்வதி படத்தை பார்த்து ஒவ்வொருவருக்காய் சுலோகம் சொல்லி வேண்டிக்கொண்டான். உள் ரூமில் ஏஏஏஏய் என்று சத்தமாக ஒரு குரல். அப்பாதான். எப்படியும் அந்த அடுக்கில் இருந்த எல்லா வீட்டிலும் அது கேட்டிருக்கும். மொத்த வீட்டில் இருந்த இருட்டிலும் அமைதியிலும் பயங்கரமாக ஒரு மிருகத்தின் கத்தல் போல கேட்டது. அவன் கால்கள் கடகட என உதறியது. போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டான். அம்மா கட்டிக்கொண்டாள். பயமா இருந்தது. கொஞ்ச நேரத்தில் தூங்கிப்போய் இருக்க வேண்டும். எதோ ஈரம் உணர்ந்து விசுக்கென எழுந்தான். அப்போது லைட் எரிந்து கொண்டிருந்தது. அப்பா கையில் ஒரு ஆரஞ்சு பக்கேட்டுடன் நின்று கொண்டிருந்தார். அம்மா தலையில் இருந்து உடம்பு முழுக்க தண்ணி. அம்மாவும் நடுங்கி கொண்டிருந்தாள். அம்மா முகத்தருகே வந்து ‘நக்கி முண்ட’ என்று கன்னத்தில் ஒரு அறை. பின் ‘நாற முண்ட’ என்று கொத்தாகத் தலைமுடியை பிடித்து தூக்கினார். அம்மா அடிக்குரலில் இருந்து பூனை கத்துவதை போல் கத்தினாள். மாறி மாறி கன்னத்தில் அடித்தார். அம்மா கை கூப்பியபடி நின்றாள். அவனுக்கு முட்டிக்கொண்டு வந்தது. விசும்பலுடன் ஒரு கேவல். அப்படியே அடக்கிக் கொண்டான்.



அரசியல் திறன்

பண்புடனில் வெளியான கட்டுரை
http://panbudan.com/story/arasiyal-thiran

ஒரு கார்பரேட்(corporate) சூழலில் எப்படிப்பட்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பது நிர்வாகவியலில் என்றும் அலசப்படும் ஒரு விஷயம். இது ஒரு ஆர்வமூட்டும் கேள்வியும் கூட. நிர்வாகத்தில் வெற்றி அறிவுத்திறனால் மட்டுமே என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. இது intelligence quotient (IQ) என்ற ஒரு அளவையால் அளக்கப்பட்டது. நிர்வாகிகள் பெரும்பாலும் இந்த தகுதியிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பின் அவர்கள் தங்கள் கீழிருப்பவர்களை நிர்வாகிக்கும் போது அவர்களின் உணர்ச்சிகளும் அதனை சமாளிக்கவேண்டிய ஒரு அவசியமும் கவனத்திற்கு வந்தது. இந்த சமயத்தில் Daniel Goldman என்பவர் உணர்ச்சி திறன் (emotional intelligence ) என்ற ஒரு கருதுகோளை அறிமுகபடுத்தினார். ஒரு தனி நபரின், குழுவின் உணர்சிகளை அவதானித்து அதை முறைப்படுத்தும் திறன் அது. பிறரின் உணர்சிகளையும் அதன் பின் உள்ள காரணிகளையும் சரியாக உணர்ந்து அதற்கேற்ப செயல்படுபவனே மனிதர்களை நிர்வகிக்க திறன் உடையவன் ஆகிறான் என்பதே அதன் சாராம்சம்.

இத்தனைக்கும் பின்பும் கூட ஒரு விஷயம் ஆய்வாளர்களை குழப்பியது. அறிவு திறனும், உணர்ச்சி திறனும் அதிகம் வாய்க்க பெற்ற பலர் பின்னால் இருக்க ஒப்பீட்டளவில் இந்த திறன்கள் அதிக அளவில் அமைய பெறாத சிலர் முன்னணியில்இருந்தார்கள். இது ஏன் என்று ஆராய்ந்து பின்பு அதற்கான காரணத்தை கண்டுபிடித்தனர். அது மாக்கியவல்லியின் காலகட்டத்தில் இருந்தே பேசப்பட்டு வரும் அரசியல் திறன் என்பதே ஆகும். இதை political quotient(PQ) என்ற சொல்லால் குறிக்க தொடங்கினர். ஆனால் மாக்கியவல்லி விவரிப்பதை போன்ற பயமுறுத்தும், ஏமாற்றும்,நம்ப வைத்து கழுத்தறுக்கும் எதிர்நிலை அம்சங்கள் கொண்டதல்ல இது. மாறாக இது மக்களின் நம்பிக்கையும், மதிப்பையும் சம்பாதித்து அதன் மூலமாக ஒரு அதிகார வலையை உருவாக்குவது. இன்றைய தட்டையான கார்பரேட் அமைப்புகளில் தன ஆதிக்கத்திற்கு கீழ் வராத எந்த வித அதிகாரமும் செலுத்த முடியாதவர்களை வைத்தே ஒருவர் பல திட்டங்களை செயல் படுத்த வேண்டி இருக்கிறது. இதில் அறிவுத்திறனும் உணர்ச்சி திறனும் மட்டும் இருந்தால் போதாது..அரசியல் திறன் அதிகமும் தேவை.

இந்த திறனை எப்படி வளர்த்து கொள்வது, அதை எப்படி வரையறுப்பது என்பது குறித்து ஜோ ஓவென்(JO OWEN ) என்பவர் தனது 'வழிநடத்துவது எப்படி (How to Lead)' என்ற புத்தகத்தில் விவரித்து இருக்கிறார். அதிகாரத்தின் விதிகள் என்ற தலைப்பில் அதை பின்வருமாறு பட்டியல் இடுகிறார்.

1) செயல்திட்டத்தை வடிவமைப்பவராய் இருங்கள்

நீங்கள் ஈடுபடும் செயல்களில் வேறு எவருக்கும் முன்னதாகவே நீங்கள் செயல் திட்டத்தை கையில் எடுப்பது அவசியம்.

  • எங்கே இருக்கிறோம்
  • இறுதி இலக்கு என்ன
  • அதை எப்படி அடைய போகிறோம்

என்ற மூன்றையும் உடனே வரையறுத்து விடுங்கள். இந்த முன்வரைவை நீங்கள் அளித்த பின்பு வேறு யாராவது மறுப்புகள் சொன்னாலும் அது இந்த சட்டகத்திற்கு உள்ளேயே இருக்கும். இதுவே அரசியலின் முதல் படி.

2) தொடர்புகளை உருவாக்குங்கள்

உங்கள் அதிகாரம் நீங்கள் உருவாக்கும் தொடர்புகளின் தரத்தையே சார்ந்து இருக்கிறது. நீங்கள் உங்கள் மேலாளருடைய மேலாளரிடம் தொடர்புகளை உருவாக்கி கொள்ளுதல் அவசியம். உங்களுடைய நேரடி நிர்வாகியால் உங்கள் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற முடிவதில்லை. அதை நீங்கள் உங்கள் தொடர்புகள் மூலமே நிரப்ப வேண்டும். உங்கள் தொடர்பு வலையை சிறுக சிறுக விரிவாக்குங்கள். உங்களை பின்பற்றுபவர்களை நீங்கள் உருவாக்கவேண்டியது அவசியம். மக்களின் முன்னேற்றத்திலும் அவர்களின் வளர்ச்சியிலும் நீங்கள் அக்கறை கொள்ளும்போது அவர்கள் உங்களுக்கு விசுவாசமானவர்களாக மாறுகிறார்கள்.

3) நடிக்க ஆரம்பியுங்கள்

நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அவரை போன்று நடிக்க தொடங்குங்கள் என்பது பழமொழி. உங்கள் மேலாளருடைய பாவனையை கைகொள்ள ஆரம்பியுங்கள். உடைகள், உடல்மொழி போன்ற எல்லாம் இதில் அடங்கும். உங்கள் மேலாளருடைய பார்வையில் ஒரு பிரச்சனையை அணுகி அவருடைய மொழியில் பேச துவங்கும் போது நீங்கள் அவருக்கு இணையானவராய் கருதப்படுவீர்கள்.

4) உங்கள் மோதல்களை தேர்ந்து எடுங்கள்

எந்த ஒரு நிறுவனமும் முரண்பாடுகள் நிறைந்ததாக தான் இருக்கும். குறைவான வாய்ப்புகளுக்கு பலர் முண்டியடிக்கும் ஒரு களன் அது. இதில் தன்முனைப்பினால் வரும் மோதல்களும் சண்டைகளும் சகஜம்.. அந்த முரண்பாடுகள் உருவாக்கும் மோதல்களில் இருந்து எப்போதும் தப்பிக்க நினைக்காதீர்கள். அதை எதிர்கொள்ளுங்கள். ஆனால் வீணான சண்டைகளில் நேர விரயம் செய்வதும் உகந்ததல்ல. இந்த மூன்று விதிகளை நினைவில் வைத்திருப்பது உதவும்.

  • சில்லறை லாபங்களுக்காக ஒரு போதும் மோதலில் இறங்க வேண்டாம்.
  • நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே கோதாவில் இறங்குங்கள்.
  • வேறு எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டுவிட்டால் மட்டுமே மோதலில் ஈடுபடுங்கள்.

5) கொஞ்சம் பைத்தியகாரனாய் இருங்கள் .

எப்போதும் அறிவிற்கும்/நடைமுறைக்கும் பொருந்தி வருகிறது போன்ற செயல்திட்டங்களை மட்டும் வைத்து கொள்ளாதீர்கள். கனவு காண்பவராக இருங்கள்.ஒரு நடைமுறை நிர்வாகியால் மைக்ரோசாப்ட்-ஐயோ ஜெனரல் மோட்டர்சையோ எதிர்கொள்ள முடிந்திருக்காது. ஆப்பிள்-யும் டோயோடாவையும் உருவாக்கி அளித்தது இந்த 'பைத்திய கார' நிர்வாகிகளே. உங்கள் கீழ் இருப்பவரிடம் இருந்து அளவுக்கு அதிகமாய் எதிர்பாருங்கள். அப்போது அவர்களின் சாத்தியங்களின் எல்லைகள் அதிகரிக்கப்படுகின்றன. அது உங்கள் நிறுவனத்தின் சாத்தியங்களை அதிகரிப்பதே.

6) அதிகாரத்தை தேடி செல்லுங்கள்

பணம் வேண்டுபவர்கள் பணத்தை தேடி செல்வது போல, புகழ் வேண்டுபவர்கள் புகழை தேடி செல்வது போல, அதிகாரம் வேண்டுபவர்கள் அதிகாரத்தை தேடி செல்லுங்கள். எந்த ஒரு அமைப்பிலும் ஒரு அதிகார மையம் ஒன்று இருக்கும். அத்துடன் இயைந்து கொள்வது மூலமே ஒருவரால் அதிகார படிகளை ஏற முடியும். இந்த மையத்துடன் ஒன்றாமல் தனித்து வேலை செய்து கொண்டிருப்பதன் மூலமாக உங்களுக்கு ஒரு பிரச்சனைகள் அற்ற ஒரு சூழல் அமையலாம். ஆனால் அதில் முன்னேற்றங்களும் இல்லை என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

7) தெளிவின்மைக்கு தயாராய் இருங்கள்

ஒரு அமைப்பில் தெளிவின்மைகளும் நெருக்கடிகளும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். தெளிவான பாதைகள் பெரும்பாலும் இருப்பதே இல்லை. அரசியல் திறன் மிக்க ஒருவன் இந்த தெளிவற்ற சூழலை தன்வச படுத்தி கொண்டு தலைமை ஏற்று செயல்திட்டத்தை வழி நடத்துகிறான். முக்கியமான செயல்திட்டத்தை அவன் கைகொண்ட பிறகு மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் சின்ன பொறுப்புகளுக்கு பிறர் முண்டியடிக்கும் நிலைமைக்கு தள்ள படுவார்கள்.

8) இறுதி இலக்குகளில் கருத்தாய் இருங்கள்

இலக்குகளில் கவனமாய் இருப்பது என்பது எல்லோரும் அறிந்த, முனைந்து சொல்லுவதற்கும் தேவையில்லாத ஒன்று என்றே தோன்றும். ஆனால் பல நிர்வாகிகள் செயல்முறை சிக்கல்களில் கவனம் கொடுத்து இறுதி இலக்கை தவற விட்டு விடுகின்றனர். நிர்வாகம் எப்போதுமே அலசி ஆராய்ந்து சிந்தனை செய்து கொண்டு இருப்பவர்களையும் செயலை முன்னேடுப்பவர்களையும் எளிதாக தரம் பிரித்து கண்டு கொள்கிறது. இரண்டாமவருக்கே முன்னேற வாய்ப்புகள் உண்டு.

9) பயன்படுத்தாதை இழந்து விடுவீர்கள்

நீங்கள் எவ்வளவு தூரம் உங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை உபயோகிக்கிறீர்களோ அவ்வளவு தூரம் நீங்கள் மேலும் அதிகாரத்தை ஈட்டுவீர்கள். அதிகாரம் மேலும் மேலும் அதிகாரத்தை ஈர்க்கும்.அதிகாரத்திற்கான ஒரு காலியிடத்தை எப்போதும் விட்டு வைக்காதீர்கள். உங்களால் முடியாவிட்டால் அது வேறொருவரால் நிரப்பப்படும்.

மேற்சொன்னவை அறிவுத்திறன் மற்றும் உணர்ச்சிதிறனின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவது அல்ல. ஆனால் இவற்றுடன் அரசியல் திறனும் சேரும்போது மட்டுமே ஒருவன் அமைப்பின் ஏணிப்படிகளில் விரைவாக ஏறுகிறான். மேலும் அதிகாரம் சூழ்ச்சிகளாலும், நயவஞ்சகத்தாலும் அடையபெறுவது அல்ல, மாறாக நம்பிக்கையும், மதிப்பும் நிறைந்த தொடர்புகளை உருவாக்கி கொள்வதிலும் இலக்குகளைஅடைவதில் உள்ள ஒருவரது திறனிலும் அது ஒளிந்திருக்கிறது என்பதை இது சுட்டுகிறது.



Sunday, 4 September 2011

Zenhabits.net

பிழைப்புக்காக எதாவது ஒரு வேலையை வேறு வழியில்லாமல் செய்து வருபவர் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அது, தனக்கு பிடித்தமான ஒரு வேலையை செய்து அதன் மூலமாக ஒரு வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்று. தினசரி ஒருவர் அனுபவிக்கும் அலுப்பிலிருந்து அது ஒரு விடுதலையை தரும் என்று அவர்கள் அறிவார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைவதில்லை. இதற்கு முதல் காரணம் தனக்கான வேலை என்ன என்பது பெருவாரியானவர்களுக்கு தெரிவதில்லை. இது தவிர பொருளாதார நெருக்கடிகள், பழகிய ஒன்றை உதறி புதியதை செய்வதில் உள்ள பயம் என்று பல காரணங்கள்.

சமீபத்தில் Leo Babuata எனபவரின் zenhabits.net என்ற வலைத்தளம் காண நேர்ந்தது. இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆறு இலக்க சம்பளம் பெற்று வந்தவர். பின் ஒரு நாள் அதை உதறிவிட்டு புனைவு எழுத்தாளராகும் தன கனவை பின் தொடர்ந்து வருகிறார். இது வரை அவர் புனைவில் எதுவும் எழுதியதாக தெரியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஒருவர் தன் இயல்பிற்கான வேலையே தேர்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை தன் வலைதளத்தில் வலியுறுத்தி வருகிறார். இவரது எழுத்தில் என்னை மிகவும் கவர்ந்தது கவனம் குவிதல் குறித்து இவர் எழுதியவைகளும் மற்றும் எப்படி குறைந்த பட்ச தேவைகளுடன் ஒருவர் வாழ முடியும் என்பது குறித்து எழுதுபவையும். உதாரணமாக அவர் வீட்டில் இணைய வசதியே அவர் செய்து கொள்ளவில்லை. இணையத்தில் நேரம் வெட்டி அரட்டைகளில் செலவிடப்பட்டு செயல்திறன் குறைகிறது என்கிறார். ஒருவரது அத்தியாவசிய இணைய தேவை உண்மையில் ஒரு நாளில் அரை மணிக்கும் குறைவாகவே. இதை ஒருவர் இணைய கபேகளில் சென்று நிறைவேற்றி கொள்ள முடியும் என்கிறார். இதனால் நேரம் நம் கட்டுபாட்டில் இருப்பதுடன் வீண் செலவும் குறைகிறது.

இது போன்ற பல அவதானிப்புகள். இவரது வலைத்தளம் டைம் பத்திரிகையின் முதல் ஐந்து வலைத்தளங்களில் 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் இடம்பிடித்துள்ளது. இவர் பல வருடங்களாக எழுதி வருகிறார்.சில குறிப்பிட்ட விஷயங்களை பற்றி திரும்ப திரும்ப பேசுவது சில சமயங்களில் அலுப்பு வராமல் இல்லை. மேலும் சில இடங்களில் ஏற்கனவே பல பேர் பேசி புளித்து போன தன்னம்பிக்கை வளர்த்தல், நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுதல் போன்றவற்றை பேசுவதையும் தவிர்க்கலாம்.

Monday, 11 October 2010

பெயர்

பெயரில் என்ன இருக்கிறது? A Rose is a Rose is a Rose என்றானே ஒரு பெரும் கவிஞன். யாரவன்? சரி நினைவுக்கு வரவில்லை. அது போல ரோஜாவை எந்த பேரில் அழைத்தாலும் அதன் அழகோ மணமோ குறைவு படவா போகிறது என்கிறீர்கள். இந்த தத்துவம் எல்லாம் சரிதான். அதற்காக நம் குழந்தைக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து விட முடியுமா என்ன? இப்படி நினைத்து தான் என் குழந்தையின் பேர் தேடும் படலத்தை துவங்கினேன். அது எத்தனை பெரிய ஒரு காரியம் என்று அது தொடங்கிய பின் தான் எங்களுக்கு புரிந்தது.

சாரதா கருவாகி மூன்று மாதத்திற்கு பின் ஒரு இனிய நாளில் பெயர்களை இப்போதே தேர்வு செய்து வைத்தால் என்ன என்று எங்களுக்கு தோன்றியது. எப்படிப்பட்ட பெயர் வேண்டும் என்பதில் நான் இரண்டு விதிகள் வைத்திருந்தேன்.

அ) கூப்பிட இலகுவாக இருக்க வேண்டும்.
ஆ) அ-வில் தொடங்க கூடாது.

இரண்டாவது நிபந்தனையின் காரணம் என் சொந்த அனுபவம் தான். அரவிந்த் என்ற பெயரை வைத்து கொண்டு நான் பட்டது கொஞ்ச நஞ்சமல்ல. பள்ளியில் இருந்தே எதற்கு ஆள் எடுத்தாலும் அகர வரிசைப்படி என் பெயர் தான் முதலில் வந்து நிற்கும். இது பெஞ்ச் தூக்குவதற்கும் , வேறு ஏதேனும் பரீட்சார்த்த முயற்சிகளுக்கு பலி ஆடு தேடி மட்டும் தான். மற்றபடி போட்டிகளில் கலந்து கொள்ளுதல், பரிசு வாங்குதல் போன்றவற்றிற்கு வேறு அளவுகோல்கள் இருந்தன. மேலும் பரீட்சை எழுதும் பொது நான் எப்போதுமே முதல் வரிசை முதல் நாற்காலி தான். இதில் உள்ள அசௌகரியம் நீங்கள் அறியாதது அல்ல,

வாய்ல வர மாதிரி பேர்னா வாழைப்பழம்னு வெக்கலாமா-ங்கற முதல் கட்ட மொக்கைகளை தாண்டி இது குறித்து பேச தொடங்கிய போது தான் புரிந்தது நல்ல பெயர் என்பதன் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வேறுபடும் என்று.

"நம்ம குடும்பத்துல பிள்ளைகளுக்கு தாத்தா பெயரோ அல்லது பாட்டி பெயரையோ வைப்பது தான் வழக்கம். அது படி பார்த்தால் பொண்ணு பிறந்தால் முத்து லட்சுமி என்றோ பையன் பிறந்தால் பிச்சுமணி என்றோ தான் வைக்க வேண்டும்" என்றார் என் அம்மா. அப்புறம் நாம கூப்பிடறது எப்டி வேணா கூப்பிடலாம் என்றும் சேர்த்து கொண்டார். பிச்சுமணி, முத்துலட்சுமி போன்ற பெயர்களுடன் என் குழந்தைகள் கான்வென்ட் பள்ளியில் சக மாணவரிடையே பட போகும் கொடுமையை எண்ணி திடுக்குற்றேன்.

"உங்க அம்மா எல்லாம் அந்த காலத்து ஆளுங்க. அவங்க பேச்ச விடுங்க. நமக்கு என்ன புடிச்சிருக்கு அது தான் இங்க முக்கியம்" என்று ஊதினாள் மனைவி. நம்ம போன தடவ உங்க ஆபிஸ் தீபாவளி பங்க்ஷன் போய் இருந்தோமே, அதுல முதல் பரிசு வாங்கின பையன் பேரு த்ருவ். நல்லா இருக்கு இல்ல. எதோ ரிஷியோட பெயராம். நமக்கு பையன் பிறந்தால் இந்த பெயரையே வைக்கலாமே.

"மச்சான் த்ருவ் நல்லா தான் இருக்கு" என்று ஆரம்பித்தான் என் பால்ய கால நண்பன் சிவகுமார்."ஆனா அவசரத்துல எப்படி கூப்பிடுவேன்னு யோசிச்சு பாத்தியா. உனக்கே நாளைக்கு உன் பையன் மேல கோவம் வந்துச்சுன்னு வெச்சுக்கோ,செந்தில், ரமேஷ், சுரேஷ்னா நல்ல சவுண்டா கத்தி கூப்பிடலாம். ஆனா த்ருவ் எல்லாம் அவ்ளோ சுளுவா வாய்ல வராதுடா. நீ வேற லண்டன்-ல எல்லாம் இருந்த ஆளு. சும்மாவே நம்ம பெயர அவனுங்க எப்படி டார்ச்சர் பண்ணுவாங்கனு உனக்கு தெரியும்". அதுவும் சரி தான். ராமசுப்ரமணியன் என்ற எனது கடைசி பெயர் ராமசுப்ர சனியன் என்றெல்லாம் கொடுமை படுத்த பட்டது நினைவுக்கு வந்தது.

பின்பு ஆதித்த கரிகாலன், செங்குட்டுவன்,அதியமான் போன்ற தமிழ் பெயர்கள் எல்லாம் யோசித்து பார்த்தேன். இவை யாவுமே மனைவியால் நிராகரிக்க பட்டது. கொஞ்சமாவது மாடர்னாக இருக்க வேண்டும் என்பது மனைவியின் நிபந்தனை. இந்த மாடர்ன் என்பது பிடிபட ரொம்ப நாள் ஆயிற்று. கொஞ்சம் ஷா, க்ஷ, ஒலியமைப்புகள் கொண்ட பெயர்கள் எல்லாம் நவீனமாக கருதப்பட்டன. வட இந்திய நடிகர்களின் பெயர் சாயலில் இருந்தால் இன்னும் உத்தமம். என்னுடன் வேலைபார்த்த திருநெல்வேலியை சேர்ந்த என் நண்பனொருவன் அவன் பையனுக்கு ஹ்ரிதிக் என்று பெயரிட்டதை என்னால் ரொம்ப நாட்களுக்கு தாங்கி கொள்ளவே முடியவில்லை. "நம்ம கொழந்த நாளைக்கு ஜீன்சும் ,ப்லேசரும், கூலர்சுமாக, நாலு எடத்துல போக வேண்டி varum. அங்க பஞ்சாபகேசன் மாதிரி உங்க பஞ்சாங்க பெயர் எல்லாமா வெச்சிட்டு நிப்பான்?" என்றார் மனைவி. யோசித்து பார்த்ததில் எனக்கும் அது ஏறக்குறைய சரியாக தான் தோன்றியது.

பின்பு நாங்கள் இரு நோட்டு புத்தகங்கள் எடுத்தோம். ஆண் பிள்ளை பெயர்களுக்கு ஒன்று. பெண் பெயர்களுக்கு இன்னொன்று. அப்போது தான் பெயர்களின் ஒரு பெரிய களஞ்சியம் எங்கள் கண்ணில் பட்டன. பார்க்கும்,கேட்கும் ஒவ்வொன்றிலும் பெயர்களை மட்டும் வடிகட்டி விடும் மனது. "இன்னிக்கு ஆபிஸ்ல சகானா இல்ல என்று தொடங்கும் போதே , சகானா என்று குறித்து கொள்வார் என் மனைவி. ராமசாமி,பழனிசாமி,ரோஹித்,காயத்ரி,கனகா,மணிசங்கர்,அமித்,அசோக்,முகுந்த் என்று எத்தனை எத்தனை பெயர்கள். ஒரு பெயரை குழந்தை மேல் திணிப்பது கூட ஒரு வன்முறையாக தான் தோன்றியது. பிடிக்கிறதோ இல்லையோ அந்த பெயரை எஞ்சிய வாழ் நாள் முழுதும் அது சுமந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த சமயத்தில் தான் பெங்கலூரிலிருந்த என் அக்காவும் கருவுற்றிருந்தாள். எத்தனையோ வருடங்களாக குழந்தை இல்லாமல் இப்போது தான் நடந்திருக்கிறது. எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் இரட்டிப்பு சந்தோசம். அக்காவுக்கு மூன்று மாதம் ஆகும் போதே இங்கு அம்மாவுடனும் எங்களுடனும் இருக்க வந்து விட்டார். மாமா பெங்களூரில் பிசினெஸ் செய்து வந்தார். எப்போவாவது தான் இங்கு எல்லாம் வந்து செல்வார். எந்நேரமும் வேலையில் தான் நினைப்பு என்று அக்கா குறைபட்டு கொள்ளாத நாளே இல்லை.

அக்கா வந்த சில மாதங்களில் சாரதா ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தாள். நாங்கள் முன் நாட்களில் எழுதி வைத்திருந்த பெயர் புத்தகத்தை எடுத்து அலசி ஆராய்ந்து சித்தார்த் என்ற பெயரை முடிவு செய்து வைத்திருந்தோம். யாரிடமும் சொல்லவில்லை. பெயர் சூட்டும் அன்று எல்லோருக்கும் எதிர்பாராமல் இருக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம்.

பதினொன்றாம் நாள் பெயர் சூட்டு விழா ஏற்பாடாகி இருந்தது. சில உறவினர்கள் முன் தினமே வீட்டிற்கு வந்திருந்தனர். பேச்சும் கும்மாளமுமாய் வீடே அமர்க்களப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் அக்கா மட்டும் யாரிடமும் பேசாமல் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். முகம் பொலிவிழந்து இருந்தது. "என்ன ஆச்சுக்கா" என்றேன். அவள் எதுவும் சொல்லவில்லை. கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது. "என்ன ஆச்சு இப்போ நீ சொல்லித்தான் ஆகணும்". இல்ல அம்மா அப்பா எல்லோரையும் கூப்பிட்டு பெரிய ரகளை பண்ணுவேன்" என்றேன். அதற்கு பின் தான் சொன்னாள். மாமாவும் அவர் நண்பரும் பெரும் முதலீட்டில் ஒரு வியாபாரம் செய்து வந்தார்கள். கூட இருந்த அந்த நண்பன் இவரை முற்றிலுமாக ஏமாற்றி இருக்கிறான். பெரும் பணத்தை எடுத்து கொண்டு குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டான். "பத்து லட்சம் மேல போச்சுடா. இப்போ என்ன பண்றது?" என்று சொல்லும் போதே அக்கா குரல் உடைந்து குலுங்கி அழுதாள்.
அவளை சமாதான படுத்தி கொஞ்சம் பணம் நான் கடனாக தருவதாக வாக்களித்து விட்டு அவளை தூங்க அனுப்புவதற்குள் இரவு வெகு நேரம் ஆகி விட்டது. மறு நாள் காலை வேறு சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும்.

பெயர் சூட்டும் நாள் அன்று சீக்கிரமே எழுந்து விட்டேன். குளித்து, தயார் ஆகி ,பின் காலை ஏழு மணியில் இருந்தே வீடு பரபரக்க துவங்கி விட்டது. புரோகிதர் முதலில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை முடித்து விட்டு பின் பெயரை மூன்று முறை குழந்தையின் காதில் சொல்லவேண்டும். முதற்கட்ட பூஜைகளை முடிக்கவே மணி பதினொன்றாகி விட்டது. இப்போது நாமகரணம் சூட்டும் பகுதி. சித்தார்த் என்று என் மனைவியிடம் ஒரு முறை சொன்னேன். அவளும் ஆமோதித்து ஒரு புன்னகை. "குழந்தை பெயர் என்ன சொல்லுங்கோ" என்றார் புரோகிதர். எனக்கு சடார் என்று ஒரு பொறி தட்டியது. "ஒரு நிமிஷம்" என்றபடி அக்காவை கூப்பிட்டேன்.தனியே அழைத்து போய் "அக்கா உன் கிட்ட ஒண்ணு கேக்கணும், நம்ம மாமவ ஏமாற்றினானே அவரோட பிரண்டு அவன் பேர் என்ன"
"அத கேட்கற நேரமா இப்போ முதல்ல போய் பூஜைய முடிச்சிட்டு வா." "இல்ல நீ சொல்லு, அவன் பெயர் என்ன". "எதுக்குடா" "இல்ல சொல்லு". "சித்தார்த்ங்கற ஒரு படுபாவி" என்றாள் அக்கா.